முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் உருவபொம்மையை எரிப்பு
பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மராட்டியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த மந்திரி சபை விரிவாக்கத்தில் 10 புதிய மந்திரிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
அதில், பா.ஜனதாவை சேர்ந்த மூத்த மந்திரிகளான பங்கஜா முண்டே, வினோத் தாவ்டே ஆகியோரின் முக்கிய இலாகாக்கள் பறிக்கப்பட்டன. பங்கஜா முண்டேயிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், கிராம மேம்பாடு, நீர் பாதுகாப்பு ஆகிய இலாகாக்கள் இருந்தன. இதில் நீர் பாதுகாப்பு இலாகா அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, இணை மந்திரி பதவியில் இருந்து கேபினட் மந்திரியாக உயர்த்தப்பட்ட ராம் ஷிண்டேக்கு வழங்கப்பட்டது.
நீர் பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த பங்கஜா முண்டே சமீபத்தில் லாத்தூர் சுற்றுப்பயணத்தின் போது வறட்சி நிவாரண பணியை ‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். மராட்டியம் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ள நிலையில் பங்கஜா முண்டேயின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் தான் அவர் அந்த இலாகாவில் இருந்து கழற்றி விடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பங்கஜா முண்டேக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். அவர்கள் அகமத் நகர் மாவட்டத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.