மாநிலங்களிடம் 1.64 கோடி தடுப்பூசிகள் உள்ளது! – மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் நிலையில் மாநில அரசுகளின் கையிருப்பில் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா கோவாக்சின், கோவிஷில்டு தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு “23 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் வீணான தடுப்பூசிகள் உட்பட 21,71,44,022 தடுப்பூசிகள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 1.64 கோடி டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்கள் வசம் உள்ளன” என தெரிவித்துள்ளது.