பாஜக தலைவர்களுக்கும் கருப்பு பூனை பாதுகாப்பு வாபஸ் : மத்திய அரசு அதிரடி!
சமீப காலமாக பல அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட நிலையில் தற்போது ராஜ்நாத் சிங் உள்ளிட முக்கிய தலைவர்களுக்கும் கருப்பு பூனை பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் பிரதமர், முன்னாள் பிரதமர் மற்றும் குடும்பத்தினர்களுக்கு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் இறப்புக்கு பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இந்த பாதுகாப்பை பெற்று வந்த நிலையில் மத்திய அரசு இதை திரும்ப பெற்றது. பதிலாக ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நாட்டில் இசட் பிரிவு பாதுகாப்பு பெற்றுவரும் முக்கிய தலைவர்கள் 13 பேருக்கு அந்த பாதுகாப்பு விலக்கப்பட்டு சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த பட்டியலில் பாஜக அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி முதல்வர் யோகி ஆதியநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் அடக்கம். கருப்பு பூனை படை கமாண்டோக்களை அவர்களது முக்கிய பணியான கடத்தல் தடுப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்காக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.