1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (12:46 IST)

குடியுரிமை சட்டத்தை ஏற்காத மாநிலங்கள் குடியரசு விழாவில் நஹி..! – பாகுபாட்டு காட்டுகிறதா பாஜக?

இந்திய குடியரசு தின விழாவில் மேற்கு வங்கம், மராட்டியத்தை தொடர்ந்து கேரள அரசின் அலங்கார வாகனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தினம் நாடு முழுவதும் ஜனவரி-26 அன்று விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. டெல்லியில் குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் வகையில் கண்கவரும் அணிவகுப்புகள் நடைபெறும். வெளிநாட்டு தலைவர்கள் முதற்கொண்டு பல தலைவர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில் இந்திய ராணுவம், மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள் சார்பில் அணிவகுப்புகள் நடத்தப்படும்.

இதில் மாநில அணிவகுப்புகளில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் கலாச்சாரம், பண்பாட்டை அனைவரும் அறியும் வகையில் அணிவகுப்பில் அலங்கார ஊர்திகளை ஏற்பாடு செய்வார்கள். இந்நிலையில் இந்த வருடம் 56 அலங்கார ஊர்திகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் 22 வகையான அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் 16 ஊர்திகள் மாநிலங்கள் சார்பிலும் 6 ஊர்திகள் அமைச்சகங்கள் சார்பிலும் இடம் பெறும் என கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அதை தொடர்ந்து மராட்டியத்திற்கும் அலங்கார ஊர்திக்கான அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கேரளாவுக்கும், பீகாருக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுக்கப்பட்ட மாநிலங்கள் பாஜக ஆட்சியில் இல்லாதவை அல்லது குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவை என்பதால்தான் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஊர்வலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள், அல்லது குறியீடுகளை அவர்கள் பயன்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என மத்திய அரசு யோசிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.