வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 மே 2020 (15:35 IST)

ஒன்றிரண்டு கொரோனா பாதிப்புகளுக்கு அலுவலகத்தை மூட வேண்டாம்! – மத்திய அரசு!

இந்தியா முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து மத்திய அரசு விளக்கியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் பாதி ஊழியர்களோடு பணிகளை தொடங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல அலுவலகங்கள் சுழற்சி முறையில் ஊழியர்களை வேலைக்கு வர அறிவுறுத்தியுள்ளன, இந்நிலையில் அலுவலகங்களில் கொரோனா குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கியுள்ளது.

அதில் அலுவலகத்தில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு கொரோனா இருந்தால் அலுவலகங்களை மூட தேவையில்லை என்றும், கிருமி நாசினிகளை தெளித்துவிட்டு வழக்கம்போல பணிகளை தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பெரிய அளவில் பாதிப்பு இருந்தால் கிருமி நீக்கம் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்கு அலுவலகங்கள் மூடி வைக்கப்பட வேண்டும் என்றும், மீண்டும் பணியை தொடங்க ஏற்ற சூழல் வரும் வரை அலுவலகத்தை திறக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, காய்ச்சல் உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறும், சந்தேகத்தின் பேரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருந்தால் தங்கள் அலுவலக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.