வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 29 மே 2024 (16:57 IST)

பிரிஜ் பூஷண் சிங் மகனின் கார் மோதி விபத்து..! 17 வயது சிறுவன் உட்பட இருவர் பலி..!

Accident
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷண் சிங்கின் மகனும் உத்தரப் பிரதேசத்தின் கைசரகஞ்ச் தொகுதியின் பாஜக வேட்பாளருமான கரண் பூஷண் சிங் கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

கரணின் தந்தை பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்து அண்மையில் ராஜினாமா செய்தார். மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது, ​​ மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது புகார் தெரிவித்தனர். 5 மல்யுத்த வீராங்கனைகள் தொடுத்த புகார்களின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சிங் மீதான வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது.
 
கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் எம்பியான பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார்கள் காரணமாக, அவருக்கு மீண்டும் சீட் வழங்க பாஜக தயங்கியது. இருப்பினும் அவரது மகன் கரண் பூஷனுக்கு இம்முறை சீட் வழங்கப்பட்டது. 

இந்தநிலையில், இன்று கோண்டா பகுதியில் கரண் பூஷண் சிங்கின் எஸ்யூவி கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 வயது பெண்மணி ஒருவரும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளார்.


விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்தின்போது கரண் பூஷண் சிங் காரில் இருந்தாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கரண் பூஷண் சிங் கான்வாய் அந்த வழியாகச் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.