காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கட்சி தாவலா? குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்து?
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 104 தொகுதிகளில் வென்ற பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனால் வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் அதிருப்தியாக இருப்பதாகவும், அவர்களை இழுத்து பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்வதாகவும் கூறப்படுவதால் முதல்வர் குமாரசாமியின் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழ வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
சமீபத்தில் அமைச்சரவை மாற்றப்பட்டபோது அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேர், பாஜகவுக்கு தாவ தயாராக இருப்பதாகவும், மேலும் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரும் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு இன்னும் 9 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே தேவை என்பதால் அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.