பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள், பாஜக மாறி மாறி போராட்டம்: பெரும் பரபரப்பு..!
பாராளுமன்ற வளாகத்தில் ஆளும் பாஜக எம்பிக்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மாறி மாறி தொடர்ந்து போராட்டம் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது, அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா கூட்டணியில் உள்ள எம்பிக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக எம்பிக்கள் திடீரென பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். "அம்பேத்கர் நமக்கு ஒரு வழிகாட்டி; காங்கிரஸ் நம்மை தவறாக வழி நடத்தியது. அம்பேத்கரை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்ற கோஷங்களை பாஜக எம்பிக்கள் எழுப்பி வருகின்றனர்.
"காந்தி குடும்பத்தில் பிறந்த அனைவருக்கும் பாரத ரத்னா விருது கிடைத்துள்ளது. ஆனால் அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி பாரத ரத்னா விருது கொடுக்கவில்லை. அம்பேத்கரை காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் அவமதித்துள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதம் இருந்து பரிகாரங்களை தேடிக்கொள்ள வேண்டும்," என பாஜக எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran