ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 மே 2020 (13:04 IST)

விராட் கோலி அனுஷ்காவை விவாகரத்து செய்யணும்! – அடம்பிடிக்கும் பாஜக பிரபலம்!

பாஜகவை அவமதிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய வெப் சீரிஸை தயாரித்த நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பிரமுகர் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதீப் ஷர்மா எழுதி அவினாஷ் அருண் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் “பதால் லோக்”. இந்த தொடரை நடிகை அனுஷ்கா ஷர்மாவின் க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அமேசான் ப்ரைமில் பிரபலமடைந்திருக்கும் இந்த தொடரில் பாஜக தலைவர்கள் பெயரை பூடகமாக பயன்படுத்தியிருப்பதாகவும், தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் காஸியாபாத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் நந்தகிஹோர் குஜ்ரார் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள அவர் இந்த வெப் சிரிஸை எழுதிய சுதீப் ஷர்மா, இயக்குனர் அவினாஷ் அருண் மற்றும் தயாரிப்பாளர் அனுஷ்கா ஷர்மாவையும் கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தகவல் தொடர்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த வெப் சீரிஸை தயாரித்ததற்காக அனுஷ்கா ஷர்மாவை கிரிக்கெட் வீரர் விராட் கோலி விவகாரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோலி ரசிகர்கள் பலர் அவரது இந்த கருத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.