செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 26 ஜனவரி 2022 (16:02 IST)

பீகார் ரயில்வே தேர்வில் முறைகேடு - ரயிலை கொளுத்திய மாணவர்கள்!

ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி கயாவில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்ததால் பரபரப்பு. 

 
ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 15ம் தேதி வெளியாகின. தேர்வு முடிவுகள் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும் என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு 2ம் நிலை  தேர்வுகள் நடைபெறும் என்ற ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 
 
தேர்வு அறிவிக்கும் போது எதுவும் தெரிவிக்காமல் திடீரென இரண்டாம் நிலை தேர்வு நடைபெறும் என்பதை ஏற்க முடியாது என மாணவர்கள் தெரிவித்தனர். பாட்னா, நவடா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களின் போராட்டம் வெடித்துள்ளது.
 
பிகார் மாநிலம் கயாவில் ரயில்வே தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயிலுக்கும் தீ வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கயாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ''சிபிடி 2 தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இது குறித்த எந்தவித புதிய தகவலும் இல்லை. முடிவுக்காக காத்திருக்கிறோம். எனவே தேர்வு முடிவை வெளியிட வேண்டும்'' என்று தெரிவித்தனர்.
 
இது குறித்து கயா எஸ்.பி ஆதித்ய குமார் கூறுகையில், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. போராட்டக்குழுவினர் ரயிலுக்கு தீ வைத்தனர். அவர்களில் சிலரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் என்றார்.