செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (10:50 IST)

காங்கிரஸோடு மொத்தமாக இணைந்த பிரபல கட்சி! – தேர்தலில் ஓங்கும் காங்கிரஸின் ‘கை’!

jan adhikar joins with Congress
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பீகாரில் பிரபலமான கட்சி ஒன்று காங்கிரஸ் கட்சியோடு தன்னை மொத்தமாக இணைத்துக் கொண்டுள்ளது.



மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் பணிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. தேசிய அளவில் பாஜக – காங்கிரஸ் இடையேயான போட்டியாக இந்த மக்களவை தேர்தல் தொடர்கிறது. காங்கிரஸின் INDIA கூட்டணியில் பல கட்சிகளும் இணைந்துள்ளன.

பீகாரை சேர்ந்த பிரபலமான அரசியல் தலைவர் ராஜேஷ் ரஞ்சன். பப்பு யாதவ் என்று பலராலும் அழைக்கப்படும் அவர் கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு கட்சிகள் சார்பாக தொடர்ந்து 5 முறை எம்.பியாக பதவி வகித்தவர். பீகாரில் செல்வாக்கு உள்ளதால் பின்னர் ஜன் அதிகார் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.

இந்நிலையில் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள இந்த சமயத்தில் தனது கட்சியை காங்கிரஸோடு இணைப்பதாக பப்பு யாதவ் அறிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த இந்த கட்சி இணைப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் மற்றும் ஜன் அதிகார் கட்சி தலைவர்கள் முன்னிலையில் இந்த இணைப்பு நடந்தது.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஒட்டுமொத்த காங்கிரஸ் குடும்பமும் எனக்கு அளித்த மரியாதையும், ராகுல் மற்றும் ப்ரியங்கா எனக்கு அளித்த அன்பும் எனக்கு போதும். இந்தியாவில் யாராவது மக்களின் இதயங்களை வென்றிருக்கிறார்கள் என்றால் அது ராகுல்காந்திதான். மக்கள் அவரை நேசிக்கிறார்கள்.

இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காக்க போராடும் ராகுல்காந்தியுடன் இணைவதை தவிர வேறு வழியில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2025 பீகார் சட்டமன்ற தேர்தல்களிலும் நாங்கள் வெற்றிபெறுவோம்” என அவர் கூறியுள்ளார். பீகாரில் உள்ள கட்சி காங்கிரஸோடு இணைந்துள்ளதால் அங்கு காங்கிரஸின் ‘கை’ மேலும் ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K