நாளை சபரிமலையில் மகரஜோதி: புல்மேடு பகுதி வழியாக பக்தர்கள் செல்ல தடை..!
நாளை சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற இருக்கின்ற நிலையில், புல்மேடு பகுதியில் மகரஜோதியை தரிசிக்கும் பக்தர்கள் அந்த வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மாலை ஆறு முப்பது மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சத்திரத்தில் இருந்து நடந்து செல்லும் பக்தர்கள் புல்மேடு பகுதியில் இருந்து மகரஜோதியை தரிசிப்பார்கள்.
ஆனால், வனவிலங்குகள் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புல்மேடு வழியாக செல்லக் கூடாது என்றும், அவ்வாறு செல்ல முயற்சிக்கும் பக்தர்களை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
குமுளி அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பார்த்தால் சபரிமலை சன்னிதானம் தெரியும் என்பதும், மகரஜோதி தென்படும் என்பதிலும், இதை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அந்த பகுதியில் கூடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதே நேரத்தில் ஜனவரி 14-ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை புல் மேட்டின் வழியாக பக்தர்கள் செல்லலாம் என்றும், மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் தான் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran