புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (20:23 IST)

உலக நகரங்கள் கண்டு வியக்கும் ஆழப்புலா – எதற்காக தெரியுமா?

ஆழப்புலாவின் ஒரு செயல்பாட்டை உலகத்தின் பெருவாரியான நகரங்கள் உற்று நோக்குகின்றன. அவர்கள் பார்த்து வியந்தது ஆலப்புலாவின் சுற்றுலா பகுதியோ, கோவில்களோ அல்ல. ஆலப்புலாவின் குப்பை மேலாண்மை திறன்தான் அவர்கள் வியக்க காரணம்.

கேரளாவில் உள்ள ஆழப்புலா இயற்கை சார்ந்த அழகான சுற்றுலா பகுதி. பொதுவாக ஒரு சுற்றுலா பகுதி என்றாலே ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வருவார்கள். அவர்கள் கொண்டுவரும் குப்பைகள் கோடிக்கணக்கில் வந்து சேரும். ஆனால் அதையெல்லாம் சேர்த்து வைக்க ஒரு குப்பை கிடங்கு கூட ஆழப்புலாவில் கிடையாது. ஆலப்புழா சாலைகளில் குப்பைகளும் கிடையாது. குப்பையே இல்லாமல் ஒரு நகரம், அதுவும் சுற்றுலா நகரம் எப்படி இருக்கிறது என்றுதான் உலக நாடுகள் ஆலப்புழாவை பார்த்து வியக்கின்றன.

ஆலப்புழாவை முன்மாதிரியாக கொண்டு இந்தியாவின் முக்கியமான இயற்கை சுற்றுலா நகரங்களான மேகாலயா, காஷ்மீர் போன்ற நகரங்களும் தங்கள் நகரத்தை மாற்ற திட்டமிட்டுள்ளன. ஆலப்புழாவில் இதை எப்படி செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள கான்பூர் ஸ்மார்ட் சிட்டி இயக்குனர் ஆழப்புலாவிற்கு நேரடியாக சென்று சுற்றி பார்த்திருக்கிறார்.

ஆலப்புழா இவ்வளவு சுத்தமாக இருப்பதற்கு பொதுமக்களிடம் இருக்கும் விழிப்புணர்வும் ஒரு காரணம். அங்கு அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதில்லை. ஓரளவு உபயோகிக்கும் பிளாஸ்டிக பொருட்களையும் பொது குப்பைத்தொட்டியில் கொட்டாமல் வீடுகளிலேயே வைத்து கொள்கிறார்கள். வாரம் ஒருமுறை பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்க வரும் நபரிடம் அதை மொத்தமாக கொடுத்துவிடுகிறார்கள். உணவகங்கள், தங்கும் விடுதிகள் அனைத்தும் இதே முறையை பின்பற்றுகின்றன. வீணான உணவுகள், மரத்திலிருந்து கொட்டிய இலை தழைகள், போன்ற மக்கும் இயற்கை குப்பைகளை மட்டுமே பொது குப்பை தொட்டியில் கொட்டுகிறார்கள். அதை ஒரு நாளைக்கு இருமுறை சேகரிக்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள், ஊரின் பல பகுதிகளிலும் ஏற்படுத்தி வைத்திருக்கும் உர தொட்டியில் போட்டு மக்க செய்வார்கள்.

அது உரமான பின்பு அந்த பகுதி பொதுமக்களும், விவாசாயிகளும் பயிர்களுக்கு அதை சிறிய தொகை கொடுத்து வாங்கி பயன்படுத்தி கொள்கின்றனர். வாரம் ஒருமுறை வீடுகள், கடைகள், உனவகங்களுக்கு சென்று சேமித்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளை மொத்தமாக சேகரித்து மாதம் ஒரு முறை மற்ற நகரங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

இந்த முறையை நாள்தோறும் பொதுமக்கள் அனைவரும் பின்பற்றுவதால் அங்கே குப்பை கிடங்கு என்ற ஒன்றே இல்லை. இதுகுறித்து ஆலப்புழா சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் “குப்பை கிடங்கில் குப்பையை சேமித்து ஒரு ஊரை சுத்தமாக வைத்துக்கொள்வது எளிதான காரியம்தான். ஆனால் குப்பை கிடங்கு இல்லாமல் ஒரு ஊரை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்றால் அது அந்த ஊரின் மக்கள் கைகளில்தான் இருக்கிறது. அதனால்தான் இங்குள்ள ஒவ்வொரு குப்பைத்தொட்டியிலும் “என் குப்பை எனது பொறுப்பு” என்ற வாசகம் உள்ளது” என்று கூறியுள்ளார்.

2017ல் நடைபெற்ற சர்வதேச சுற்றுசூழல் மாநாட்டில் உலகில் குப்பை மேலாண்மையில் உயரிய இடத்தில் இருக்கும் நகரங்களின் பட்டியலில் ஆழப்புலாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயல்முறையை இந்தியாவின் பல நகரங்கள் செயல்படுத்த முன்முயற்சிகளை எடுத்து வருகின்றன. அரசாங்கம் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் மக்கள் சரியான விழிப்புணர்வை பெற வேண்டியது மிக அவசியம்.