வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 8 ஜூன் 2019 (18:19 IST)

நைஸாக பேசி ஷோ ரூமிலிருந்து காரை திருடி சென்ற நபர்- பெங்களூரில் வினோத சம்பவம்

பெங்களூரில் உள்ள பிரபல கார் ஷோ ரூமிலிருந்து தன்மையாக பேசி காரை திருடி சென்ற நபரை நான்கு மாதங்களாக தேடி வருகின்றனர்.

பெங்களூரில் முக்கிய பகுதியில் உள்ளது பிரபல நிசான் கார் நிறுவனத்தின் ஷோ ரூம். கடந்த ஜனவரி 23 அன்று ஜோஸ் தாமஸ் என்ற நபர் கார் வாங்க விரும்புவதாகவும், அதற்கான தகவல்களை பெறுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஷோ ரூம் பணியாளர்களும் கார் மாடல்களை காட்டியுள்ளனர். அப்போது புதிதாக அறிமுகமாகியிருந்த ஒரு மாடலை வாங்க ஆசைப்படுவதாக தெரிவித்த அவர் ரூபாய் 2 லட்சத்தை முன்பணமாகவும் செலுத்தியுள்ளார். பிறகு காரை ஒரு முறை ஓட்டி பார்க்கவேண்டும் என கேட்டுள்ளார்.

கையில் காசை பார்த்த திருப்தியில் பணியாளர்களும் அதற்கு சம்மதித்து சோதனை ஓட்டத்திற்காக வைத்திருந்த காரை ஓட்டி பார்க்க அவருக்கு கொடுத்துள்ளனர். காரை எடுத்து கொண்டு கண்ணுக்கெட்டாத தூரத்தில் சென்றவர் திரும்ப வரவேயில்லை. காத்திருந்து பார்த்தவர்கள் கடைசியாக அவர் தங்களை ஏமாற்றி காரை திருடி கொண்டு சென்றுவிட்டதை உணர்ந்தனர்.

என்றாலும் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்த கஸ்டமர் ஆயிற்றே! எனவே அவரது எண்ணுக்கு கால் செய்திருக்கிறார்கள். மொபைல் ஸ்விட்ச் ஆஃப்-ல் இருந்திருக்கிறது. அப்போதும் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று யாரும் புகார் செய்யவில்லை. இப்போ வந்துவிடுவார், அப்போ வந்துவிடுவார் என நான்கு மாதமாய் காத்திருந்துவிட்டு தற்போது சென்று போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள் ஷோ ரூம் அதிகாரிகள்.

”இவ்வளவு நாள் கழித்து இப்போது புகார் கொடுப்பது ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளனர் காவல் துறையினர். “அந்த காரின் விலை 18லட்சத்து 60 ஆயிரம். அவர் முன்பணமாக 2 லட்சம் கொடுத்துவிட்டு மீத 16 லட்சத்து 60 ஆயிரத்தை சோதனை ஓட்டம் முடிந்ததும் கொடுக்கிறேன் என கூறியிருந்தார். அந்த சோதனை ஓட்ட காரின் எண்ணும் தற்காலிகமான எண்தான். அதனால்தான் காத்திருந்தோம்” என பதில் அளித்திருக்கின்றனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீஸார் காரை திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.