ஜாமியா துப்பாக்கிச் சூடு; ”கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”.. அமித் ஷா
ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், டெல்லி ஜாமியா மில்லையா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் வெளியே நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் திடீரென நுழைந்த நபர் துப்பாக்கியை எடுத்து போராட்டக்காரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஷடாப் என்ற மாணவரின் கையில் புல்லட் பாய்ந்ததது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் “ஜெய் ஸ்ரீராம்” என உச்சரித்துவிட்டு “இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் வந்தே மாதரம் என்று உச்சரியுங்கள்” என கூறிவிட்டு துப்பாக்கியால் சுட்டதாக தெரியவருகிறது. இதனை தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு எதிராக பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஜாமியா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக கமிஷ்னரிடம் பேசியுள்ளேன். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கம்படி அறிவுறுத்தியுள்ளேன்” என கூறியுள்ளார்.