புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2019 (22:59 IST)

கடிதம் எழுதினால் தேசத்துரோக வழக்கா? பிரபல இயக்குனர் ஆவேசம்

சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், கடிதம் எழுதினால் தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்

நாட்டில் மதச்சாயம் பூசப்பட்டு நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி மணிரத்னம், அனுராக் காஷ்யப், சவுமியா சட்டர்ஜி, ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதினர். இது குறித்து பீகார் மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கடிதம் எழுதிய 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது

இதுகுறித்து பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியபோது, ‘நமக்கு என்னதான் ஆச்சு. இந்த செய்தியை கேட்டதும் என்னால் முற்றிலும் நம்பமுடியவில்லை. ஏனெனில், நாங்கள் எழுதிய இந்த கடிதத்திற்காக தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதிக்கும் என்று கற்பனை செய்ய முடியவில்லை. அரசை விமர்சனம் செய்தால் அது தேச விரோதம் ஆகாது. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம்.

அந்தக் கடிதம் நம்முடைய ஜனநாயக மதிப்பீடுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற நேர்மறையான எண்ணத்தில் எழுதப்பட்டது. நாட்டின் பன்முகத்தன்மையை நம்முடைய ஜனநாயக நாட்டின் நிலைநிறுத்த வேண்டும் என்றே அந்த கடிதம் கோருகிறது. இதனை தேச துரோகம் என்பதுபோல் சித்தரிக்கக் கூடாது. நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்வதில் எங்களுக்கும் ஒரு கடமை இருக்கின்றது என நம்புகிறோம். பசு பாதுகாப்பு என்ற கும்பல் தாக்குதலும் கொலைகளும் நடைபெற்று வருகின்றன. கடிதத்தில் கூறியிருப்பது எல்லாம் நாங்கள் கண்டுபிடித்தது அல்ல. நம்முடைய கண்களுக்கு முன்னாள் நடப்பவை. ஆனால், அதனை யாரும் சரிபார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார்.