வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2024 (12:12 IST)

டெல்லி முதலமைச்சராக நாளை மறுநாள் பதவியேற்கிறார் அதிஷி..!!

Kejriwal Adhisi
டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி  வரும் 21ம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையாலும்,  சிபிஐயாலும் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கடந்த 13ம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது, ஆவணங்களில் கையெழுத்து போடக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்ததால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். 
 
இதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை  அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷி, டெல்லியின் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
 
தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால்  முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.  துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். அதே நேரத்தில் அதிஷி டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்து புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

 
இந்த நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி, பதவியேற்பதற்கான தேதியை செப்டம்பர் 21-ம் தேதி என கூறியிருந்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் நாளை மறுநாள் டெல்லி முதலமைச்சராக அதிஷி பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.