வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2024 (21:29 IST)

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

edapadi
தமிழக மீனவர்கள் விவாகரத்தில் மத்திய மாநில அரசுகள் இழைக்கும் வரலாற்றுத் துரோகம் கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், இலங்கை நீதிமன்றம் அவர்களுக்கு தலா 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழை எளிய மீனவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில், அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதும், அதீத தண்டனைகளை விதிப்பதும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டை அடித்து இழிவுபடுத்துவது என இலங்கை அரசின் தொடர்ச்சியான எதேச்சதிகாரப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி தெரிவித்துள்ளார்
 
தேர்தல் மேடைகளில் வெறும் வாக்குகளுக்காக மட்டும் கச்சத்தீவு பற்றியெல்லாம் பேசும் மத்திய பாஜக கூட்டணி அரசும், மாநில விடியா திமுக அரசும் இலங்கையின் இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும், மாநிலத்தில் ஆட்சியும், மத்தியில் 40 எம்.பி.க்களைக் கொடுத்தும், தமிழ்நாட்டின் மீனவர்கள் நலன் குறித்து விடியா திமுக அரசு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் மீனவர்களுக்கு இவர்கள் இருவரும் இழைக்கும் வரலாற்றுத் துரோகம் கடும் கண்டனத்திற்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
உடனடியாக இலங்கை அரசிடம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது போடப்பட்டுள்ள அபாண்டமான அபராதம் மற்றும் தண்டனைகளை ரத்து  செய்வதுடன், மீனவர்களையும் அவர்தம் உடைமைகளையும் உடனே விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மாநில அரசுகளை  வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.