ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (12:56 IST)

நடிகர் சித்திக் மீது பாய்ந்தது பாலியல் வழக்கு.! நடிகை ரேவதி அளித்த புகாரில் அதிரடி.!!

Siddique
நடிகை ரேவதி அளித்த புகாரில் நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் மற்றும் வேலை செய்யும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கேரள அரசு கடந்த 2018ஆம் ஆண்டு கமிஷன் அமைத்தது. 
 
இந்த கமிஷன் 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு இருந்து வருவதாகத் அதிர்ச்சி தகவல் வெளியானது.   
 
இதையடுத்து பல நடிகைகள் தங்களுக்கும் பாலியல் தொல்லை நடந்ததாக புகார் தெரிவித்து வருகின்றனர். தொடர் பாலியல் புகார்கள் தொடர்பாக மலையாள நடிகர் சங்க அமைப்பான ‘அம்மா’ அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள், தார்மீக பொறுப்பேற்று தலைவர் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
 
இந்நிலையில் மலையாளத் திரையுலகில் எழுந்துள்ள பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம், மலையாள நடிகை ரேவதி சம்பத் அளித்த பாலியல் புகாரின் பேரில், மலையாள நடிகரும், நடிகர் சங்க முன்னாள் பொதுச் செயலாளரருமான சித்திக் மீது, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 
மஸ்கட் ஹோட்டலில் 2016-ல் நடந்த வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, ரேவதி சம்பத் அளித்த புகாரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.