அயோத்தியில் முஸ்லீம் வேட்பாளர் வெற்றி! வாக்களித்த இந்துக்கள்!
உத்தர பிரதேசத்தில் நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்காக நடந்த உள்ளாட்சி தேர்தலில் அயோத்தி வார்டில் இஸ்லாமிய சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ள நிலையில் அங்குள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 14,522 பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடந்த நிலையில் 17 மாநகராட்சி மேயர் பதவிகளிலும், நகராட்சி, பேரூராட்சியில் பெரும்பான்மை பகுதிகளிலும் பாஜக வென்றுள்ளது.
இந்த தேர்தலில் அயோத்தி மேயர் தேர்தலில் 60 வார்டுகளில் 27 வார்டுகளை பாஜக வென்றுள்ளது. ஆனால் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் ராம் அபிராம் தாஸ் வார்டில் ஆச்சர்யகரமாக ஒரு இஸ்லாமிய வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
அந்த வார்டில் 440 இஸ்லாமிய மக்களும், 3,844 இந்து மக்களும் வசிக்கும் நிலையில் சுல்தான் அன்சாரி என்ற அந்த சுயேட்சை இஸ்லாமிய வேட்பாளர் 2,388 வாக்குகளை பெற்று 42 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். அந்த வார்டில் பாஜக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K