செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (23:24 IST)

கர்நாடகாவில் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற குழந்தையை மனம்மாறி மீண்டும் தேடிவந்த தாய்

கர்நாடகா மாநிலத்தின் கொள்ளேகால் அருகே கணவர் பிரிந்து சென்றதால் வளர்க்க முடியாததால் குழந்தையை, அதன் தாய் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றார். அதைதொடர்ந்து அவர், குழந்தையை தேடிவந்த சம்பவம் நடந்துள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா மத்தேபுரா பேருந்து நிலையம் அருகே உள்ள குப்பை தொட்டியில் பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை கிடந்தது. இந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அதனை மீட்டு கொள்ளேகால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
 
விசாரணையில் குழந்தையை, அதன் தாய் வீசிச் சென்றது தெரியவந்தது. ஆனால், குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை. இதற்கிடையே குழந்தையை வீசிச் சென்ற தாய், மீண்டும் குப்பை தொட்டிக்கு வந்து குழந்தையை பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளார்.
 
அப்போது அவர்கள், குழந்தையை போலீசார் மீட்டுச் சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து பெண், கொள்ளேகால் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம், நான்தான் குழந்தையின் தாய் என்று கூறினார். இதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு பின்னர் குழந்தையை தாயிடம் ஒப்படைத்ததாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
பார்வை குறைபாடுள்ள பயணிகளுக்கு உதவ சென்ட்ரல், எழும்பூரில் பிரெய்லி வரைபடங்கள்
 
பிரெய்லி
 
பார்வை குறைபாடுள்ள பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் பிரெய்லி வரைபடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், "சென்னை கோட்டத்தில் முதல்முறையாக பிரெய்லி வரைபடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், சென்னை சென்ட்ரலில் ரேனால்ட் நிசான் நிறுவனமும், சென்னை எழும்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் நிறுவனமும் அமைத்துள்ளன. ரயில் நிலையத்தின் நடைமேடைகள், மற்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகளை இந்த பிரெய்லி வரைபடம் மூலமாக அறியலாம்.
 
இந்த வரைபடம், பார்வை குறைபாடுள்ள பயணிகள், மற்றவர்களின் உதவி இல்லாமல் தாங்களே ரயில் நிலையத்துக்குள் தேவைப்படும் இடங்களுக்கு சென்று வர பயனுள்ளதாக இருக்கும். இதுதவிர, இந்த பிரெய்லி வரைபடத்தில் 'கியூ ஆர் கோடுகள்' கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்து தகவல்களை ஒலிக்கச் செய்து, போக விரும்பும் இடத்தின் வழியைத் தெரிந்து கொள்ளலாம்.
 
பார்வை குறைபாடு உடையவர்களுக்கு, நடைமேடைகளை பாதுகாப்பான இடமாக மாற்ற, நடைமேடைகளின் ஓரத்தில் தொட்டுணரும்படியான டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன" என கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கையில் பட்டினியால் பிள்ளைகள் அழ, நடுவீதியில் தேம்பியழுத தந்தை
 
உணவு
 
சாப்பாடு இல்லாமல், தன்னுடைய பிள்ளைகள் பால் கேட்டு அழுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனத் தெரிவித்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதானவர், ஹெம்மாத்தகம பிரதான நகரின் நடுவீதியில், தேம்பியழுதுகொண்டிருந்ததாக, 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
பதாகையொன்றை வைத்து, அழுதுகொண்டிருந்த அவரை பார்த்த போலீசார், வர்த்தகர்கள் மற்றும் நகரத்தில் இருந்தவர்கள், அவருக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக்கொடுத்ததாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேசன் வேலைச் செய்யும் அவருக்கு 7 வயதில் மகளும் 13 வயதில் மகனும் இருக்கின்றனர். அவருடைய மனைவிக்கு வேலையில்லை. பொருளாதார நெருக்கடி காரணமாக சிமெண்ட் விலை அதிகரித்துள்ளது. இதனால், அவருக்கு முறையாக வேலைக்கிடைப்பதில்லை என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
"மேசன் சங்கமே பொறுமை காத்தது போதும், பொருட்களின் விலைக​ளை குறைத்து, ஏழ்மையானவர்களுக்கு நிவாரணம் கொடு" என்​றே அந்த பதாகைளில் எழுதப்பட்டிருந்தது.
 
7 வயதான பெண் பிள்ளை, பால் கேட்டு அழுகிறது. பிள்ளைகளுக்கு பால் மட்டுமல்ல, தன்னுடைய குடும்பத்தில் சகலருக்கும் நாளாந்தம் மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை. எனக்கு வேலைக்கிடைப்பதில்லை என்பதால், பிள்ளைகளை வளர்க்கமுடியவில்லை" என தெரிவித்ததாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பிரதான வீதியில் அமர்ந்திருந்தவரின் அருகில் சென்று போலீசார் விசாரித்தனர். அதன்பின்னர், அங்கு குழுமியிருந்தவர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். கிடைத்த உதவிகளைக் கொண்டு, அந்நபருக்கு தேவையான பொருட்களை போலீசாரும், பொதுமக்களும், வர்த்தகர்களும் பெற்றுக்கொடுத்தனர்.
 
அதன்பின்னர், பொருட்களை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வீட்டுக்குச் செல்வதற்கும் வாகன உதவியும் செய்துகொடுக்கப்பட்டது.
 
நாடு தீப்பற்றி எரியும் நிலையில் உள்ளது - விமல் வீரவன்ச
 
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க
 
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நம்பிக்கை கிடையாது, நாடு தீப்பற்றி எரியும் நிலையில் உள்ளது என, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அவர் கூறுகையில், "நாடு மிக மோசமான நெருக்கடியினை நோக்கி செல்கிறது. தற்போதைய நிலைமையை காட்டிலும் மோசமான நெருக்கடி கிடையாது.
 
ரணில் விக்ரமசிங்க மீது சர்வதேசத்திற்கு நம்பிக்கை கிடையாது.
 
மகாநாயக்க தேரர்களின் அறுவுறுத்தலுக்கமைய சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
 
நாடு தீப்பற்றி எரியும் நிலையில் உள்ளது. பிரச்னைகளுக்கு தீர்வு காண சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்" என தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.