1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (09:31 IST)

100 புத்தகங்கள் வரதட்சணை கேட்ட பெண்: தேடியலைந்த மணமகன்!

கேரளாவில் திருமணம் செய்து கொள்ள வரதட்சணையாக மணப்பெண் புத்தகங்களை கேட்டதால் மணமகன் புத்தகங்களை தேடி அலைந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் இஜாஸ் ஹக்கிம். சமூக செயற்பாட்டாளரான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அஜ்னா ஹசீம் என்ற பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய முறைப்படி மணம் முடிக்கும் பெண்ணுக்கு மணமகன் வரதட்சணை (மெஹர்) கொடுப்பது வழக்கம். புத்தக விரும்பியான அஜ்னா ஹசீம் வித்தியாசமான வரதட்சணை ஒன்றை மணமகனிடம் கேட்டிருக்கிறார்.

சுமார் 80 புத்தகங்களின் பட்டியலை கொடுத்து அவற்றை வரதட்சணையாக வாங்கி தர வேண்டும் என கூறியுள்ளார். அந்த பட்டியலில் உள்ள புத்தகங்களை பல கடைகளில் ஏறி இறங்கி வாங்கியுள்ளார் மணமகன். கடைகளில் கிடைக்காத புத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வது என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு 80 புத்தகங்களை சேர்த்துள்ளார். தனது எதிர்கால மனைவியின் புத்தக ஆசையை ஊக்கப்படுத்தும் விதமாக தனக்கு விருப்பமான 20 புத்தகங்களை சேர்த்து வாங்கி 100 புத்தகமாக கொடுத்து மணம் செய்து கொண்டுள்ளார். அந்த புத்தகங்களில் இந்திய அரசியலமை, கீதை உள்ளிட்டவையும் அடக்கம்.

இந்த சம்பவம் புத்தக பிரியர்கள் இடையே பெரும் வைரலாகி வருகிறது. அஜ்னாவின் நூதனமான இந்த வரதட்சணையை பெரிதும் வரவேற்றுள்ளனர்.