1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 நவம்பர் 2023 (10:31 IST)

யூட்யூபர்கள் இடையே சண்டை.. துறைமுகத்தையே கொளுத்திவிட்ட சம்பவம்!

Visakapatinam harbour
சமீபத்தில் விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு இரண்டு யூட்யூபர்கள்தான் காரணம் என தெரியவந்துள்ளது.



நேற்று விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் படகு ஒன்று தீ பிடித்தது. இந்த தீ மற்ற படகுகளுக்கும் வேகமாக பரவியதுடன் படகுகளில் இருந்த சிலிண்டர்களும் வெடித்ததால் பெரும் தீ விபத்தாக இது மாறியது. உடனடியாக சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தீ விபத்திற்கு காரணம் இரண்டு யூட்யூபர்கள் இடையேயான சண்டையே என தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாலாஜி என்பவருக்கு சொந்தமான படகில் யூட்யூபர்கள் இருவர் மது விருந்து நடத்தியுள்ளனர்.

அப்போது அவர்களிடைய பண விஷயத்தில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக சண்டையிட்டு கொண்ட அவர்கள் மதுபோதையில் படகில் தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். படகு எரிவதை கண்ட மீனவர்கள் அதை கடலுக்குள் தள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் பலத்த காற்று வீசியதால் தீ மற்ற படகுகளுக்கு பரவி பெரும் விபத்தாக மாறியுள்ளது.

இந்த விபத்தில் 36 படகுகள் முழுமையாக எரிந்துவிட்டது. 9 படகுகள் சேதமடைந்துள்ளன. சம்பவ பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆந்திர மீன்வளத்துறை அமைச்சர் சீதிரி அபல்ராஜூ பாதிகப்பட்டோர் குடும்பங்களுக்கு படகுகளின் தொகையில் 80 சதவீதம் இழப்பீடாக அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். போலீஸார் இந்த வழக்கில் மேலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு யூட்யூபர்களின் செயலால் மீனவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K