ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்த 60 லட்சம் பேர்; தப்ப முடியாது - மத்திய அரசு எச்சரிக்கை
மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகளில் அதிகப்படியான பணத்தை டெபாசிட் செய்த நபர்களின் பட்டியலை மத்திய அரசு சேகரித்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மக்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர்மோடி கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்தார். அதேபோல், தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், வங்கியில் பணம் செலுத்த சில கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்தது. ரூ. 2 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால், வருமானத்திற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் எனவும், அதேபோல், கணக்கில் வராத கருப்பு பணத்தை அதிக அளவில் வைத்திருப்பவர்கள், தங்கள் வருமானத்தை காட்டினால் அதற்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 50 சதவீதத்தில் 25 சதவீதத்தை வட்டியில்லாமல் 4 ஆண்டுகளில் வங்கியில் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
முக்கியமாக, வங்கி கணக்குகளில் ரூ.2 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்பவர்கள் வருமான வரி மற்றும் இதர புலனாய்வு நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.
இன்றோடு மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை டெபாசிட் செய்யும் நாள் முடிவடைகிறது. இந்நிலையில், வங்கிகளில் ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேரின் பட்டியலை வருமான வரித்துறை சேகரித்துள்ளது.
இந்த தொகை கருப்பு பணமாக இருக்க வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு கருதுகிறது. எனவே, கருப்புப் பணத்தை வங்கியில் செலுத்தி வெள்ளைப் பணமாக மாற்றிவிட்டோம் என நினைப்பவர்கள் தப்பிக்க முடியாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ரூ.2 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்கள், பல வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்தவர்கள், அடுத்தவர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்தவர்கள் என பலரும் இதில் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.
முக்கியமாக, அந்த ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்த 60 லட்சம் பேர்களில், 3 முதல் 4 லட்சம் கோடி வரை தனி நபர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளனர். மீதமுள்ள தொகையை தனியார் கம்பெனிகள் செலுத்தியுள்ளன.
அவர்களின் மீது பார்வையை திருப்பியுள்ள வருமான வரித்துறையினரின் நடவடிக்கையால், அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.