செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2024 (17:17 IST)

ஜம்முவில் ராணுவ வீரர்கள் 5 பேர் பலி.! ஹெலிகாப்டர் மூலம் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரம்..!!

kashmir attack
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தோடா பகுதியில்  ஹெலிகாப்டர்கள் மூலம் பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 
 
ஜம்மு காஷ்மீரின் வடக்கு தோடாவில் உள்ள தேசா வனப் பகுதியில் உள்ள தாரி கோடே உரார்பாகியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து, ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து   தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே  துப்பாக்கிசூடு நடந்தது. அதில், 5 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு மேலும் பாதுகாப்பு வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.   

மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் அடர்ந்த வனப்பகுதியை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் தப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஹெலிகாப்டர்கள் மூலம் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. 
 
Ragul Gandhi
பாஜக மீது ராகுல் விமர்சனம்:

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, பாஜகவின் தவறான கொள்கைகளால் ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

 
தொடர்ச்சியான தாக்குதல்கள் ஜம்மு காஷ்மீரின் மோசமான நிலையை வெளிப்படுத்துவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.