வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (12:37 IST)

ஒரு ஆண்டில் 20 ஆயிரம் பள்ளிகள் மூடல்!? – கல்வி அமைச்சகம் அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் சுமார் 20 ஆயிரம் பள்ளிகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2019 இறுதியில் ஏற்பட்ட கொரோனா முழுமுடக்கம் கல்வி, பொருளாதார என அனைத்து தளங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகள் செயல்படாததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வந்தனர். ஆனால் இணைய வசதி இல்லாத மாணவர்கள் ஆன்லைன் கல்வி பெறுவதில் சிக்கல் எழுந்தது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியதால் கடந்த ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் முழுமுடக்கம் காரணமாக, பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாணவர்கள் படிப்பை நிறுத்தியதாக முன்னதாக தகவல்கள் வெளியானது.


தற்போது மத்திய கல்வி அமைச்சகம் 2021-22 காலகட்டத்தில் பள்ளி கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2020-21 ல் இந்தியாவில் மொத்தம் 15,09,000 பள்ளிகள் இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை 2021-22ல் 14,89,000 ஆக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் பள்ளிகள் கொரோனா முழுமுடக்கத்திற்கு பின் செயல்படாமல் போயுள்ளன. இதில் தனியார் பள்ளிகளே அதிகம் என கூறப்படுகிறது.

மேலும் பல பள்ளிகளில் கம்ப்யூட்டர், இணைய வசதி, கழிப்பறை வசதி போன்றவை முழுமையாக கிடைக்காத நிலையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K