1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2017 (11:20 IST)

2ஜி தீர்ப்பு; உள்குத்து வேலை ஏதோ நடந்திருக்கு: கிளம்பும் சந்தேகங்கள்!

நாட்டையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி.
 
இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான புகாருக்கு உரிய ஆதாரங்களை கூறி நிரூபிக்காததால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார். இந்த தீர்ப்பை திமுக, காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தீர்ப்பில் ஏதோ நடந்திருக்கிறது என மற்ற கட்சியினர் கூறுகின்றனர்.
 
இந்நிலையில் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், 2ஜி ஊழல் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று. நாட்டையே உலுக்கியதுடன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வீழ்வதற்கும் காரணமாக இருந்தது.
 
இன்று குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ வேண்டுமென்றே இந்த வழக்கில் குழப்பியுள்ளதோ? மக்களுக்குப் பதில் கூற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
 
அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ நேற்று வெளியிட்ட அறிக்கையில், 2ஜி வழக்கு தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது நன்றாக நிறுவப்பட்டுள்ளது.
 
இதில் சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றமும் தெரிவித்து அதனடிப்படையில் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. எனவே வலுவான ஆதாரங்கள் இல்லையென்றால் இதுதொடர்பாக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.