முகமது நபி சர்ச்சை; இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும்! – 15 நாடுகள் கண்டனம்!
முகமது நபி குறித்து பாஜக பிரமுகர் பேசிய விவகாரத்தில் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என 15 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதரான நபிகள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்த சவுதி மக்கள் இந்திய பொருட்களை புறக்கணிப்பதாக ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.
இதுகுறித்து பாஜக விளக்க கடிதம் வெளியிட்டுள்ளதோடு, தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியும் உத்தரவிட்டுள்ளது. இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்து இந்திய அரசும் அறிக்கை வெளியிட்டது.
ஆனால் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு இந்த விவகாரத்தில் கடும் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. பாஜக செய்தி தொடர்பாளரின் கருத்துக்கு ஈரான், ஈராக், குவைத், கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா உள்ளிட்ட 15 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதில் சில நாடுகள் இந்த விவகாரத்தில் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றன.