104 வயது கொலை குற்றவாளிக்கு ஜாமீன்.. நிரந்தர விடுதலை கிடைக்குமா?
104 வயது கொலை குற்றத்திற்காக சிறையில் இருக்கும் ஒருவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், அவரது நிரந்தர விடுதலை குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த ரக்ஷித் மண்டல் என்பவர், 1988ஆம் ஆண்டு தனது சகோதரரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அவரது மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அவர் கடந்த 38 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். தற்போது 104 வயதான அவர், தனது வயதை கருத்தில் கொண்டு விடுதலை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஜாமீன் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், தண்டனையிலிருந்து முழுமையாக விடுவிப்பது குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்த ரக்ஷித் மண்டல், "எத்தனை ஆண்டுகள் நான் சிறையில் இருந்தேன் என்று எனக்கே தெரியாது. எப்போது சிறைக்கு வந்தேன் என்றும் எனக்கு நினைவில்லை. இனி மீதம் இருக்கும் காலத்தை பேரக்குழந்தைகளுடன் கழிக்க விரும்புகிறேன்," என்று கூறியுள்ளார். அவருக்கு விரைவில் நிரந்தர விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva