திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: செவ்வாய், 6 நவம்பர் 2018 (14:33 IST)

'சர்கார்' திரைவிமர்சனம்

கார்ப்பரேட் கிரிமினல் விஜய்க்கும், கருவிலேயே கிரிமினாக இருக்கும் வரலட்சுமிக்கும் இடையே நடக்கும் அரசியல் சதுரங்க திரைப்படமான 'சர்கார்' திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

அமெரிக்காவில் இருந்து ஓட்டு போடுவதற்காக தனி விமானத்தில் பல லட்சங்கள் செலவு செய்து வரும் விஜய், தன்னுடைய ஓட்டை இன்னொருவர் கள்ள ஓட்டாக போடப்பட்டது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்து, நீதிமன்றம் செல்கிறார். ஒருவருடைய ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டுவிட்டது என்றால் தேர்தல் விதிமுறை 49P என்ற விதியின்படி வாக்காளரை ஓட்டு போட அனுமதிக்க வேண்டும். ஆனால் தேர்தல் கமிஷன் அதனை செய்யவில்லை என்பதால் விஜய்யின் ஓட்டு பதிவாகும் வரை அந்த தொகுதியின் தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு போடுகிறது. இந்த வழக்கால் இப்படி ஒரு செக்சன் இருப்பதை தெரிந்து கொண்ட பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் இதேபோன்று வழக்கு போடுகின்றனர் இதனால் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. அதன்பின்னர் முதல்வர் பழ.கருப்பையா, அவரது மகள் வரலட்சுமி, அமைச்சர் ராதாரவி ஆகியோர் விஜய்யை பழிவாங்க போடும் திட்டம், அதை முறியடிக்கும் விஜய்யின் சாமர்த்தியம் தான் இந்த படத்தின் மீதிக்கதை

அப்பாவியான முகம், கலக்கலான ரொமான்ஸ், நக்கலுடன் கூடிய காமெடி, போன்ற பலவகை நடிப்புத்திறமையை ஒரே படத்தில் தரும் திறமையான நடிகர் விஜய். ஆனால் இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை உர்ரென முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு, வசனங்களை திக்கி திணறி பேசுகிறார். ஒருசில மாஸ் காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் விஜய் ரசிகர்கள் விசிலடிப்பதற்கு மட்டுமே பயன்படுகிறது. பொதுவான ஆடியன்ஸ்களை விஜய் கண்டுகொள்ளவே இல்லை

கீர்த்திசுரேஷ் வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின்கள் போல் ஒரு பாட்டு மற்றும் ஒருசில சம்பந்தமில்லாத காட்சிகளில் தோன்றி பின் திடீரென மறைகிறார். வரலட்சுமிக்கு 'சண்டக்கோழி 2' படத்தை அடுத்து அழுத்தமான நெகட்டிவ் கேரக்டர். விஜய்யிடம் நேருக்கு நேர் நின்று சவால்விடும் மாஸ் காட்சியில் பட்டையை கிளப்புகிறார். முதல்வர் கேரக்டரில் பழ.கருப்பையா, அமைச்சர் கேரக்டரில் ராதாரவி ஆகியோர் கேரக்டர்கள் வரலட்சுமியால் டம்மியாக்கப்படுகிறது. யோகிபாபுவின் நகைச்சுவை ஓகே

ஜெயமோகனின் கூர்மையான அரசியல் வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். 'எதிர்க்க ஆளே இல்லை என்று இறுமாப்புடன் இருப்பதுதான் ஜனநாயகத்தின் முதல் பலவீனம் , நெகடிவ்வா சொன்னால்தான் ஒரு விஷயம் மக்களை போய்ச்சேருகிறது', மக்களை திசைதிருப்ப இன்னொரு பிரச்சனை போதும்', போன்ற வசனங்கள் உதாரணம். ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை மெர்சல் போல் அசத்தியிருப்பார் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பின்னணி இசையும் சுமாரான லெவல்தான்.

பைக்குகள் அணிவகுத்து செல்லும் காட்சி, ஆக்சன் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரனின் உழைப்பு தெரிகிறது. படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் இரண்டாம் பாதியை இன்னும் குறைத்திருக்கலாம்.

அகிரா, ஸ்பைடர் படங்களை அடுத்து திரைக்கதையில் மீண்டும் சறுக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ஒருசில மாஸ் காட்சிகள், ஒருசில தற்காலிக அரசியல் நிகழ்வுகளை ஞாபகப்படுத்தும் காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் ஏனோதானோ என்று உள்ளது. நம்ப முடியாத, காதில் பூ சுற்றும் காட்சிகள் மிக அதிகம். குறிப்பாக 210 தொகுதிகளில் 210 வெவ்வேறு சின்னங்களில் கட்சியே இல்லாமல் எல்லோரும் சுயேட்சைகளாக வெற்றி பெறுவது என்பது நல்ல கற்பனை. ஆனால் நடைமுறையில் சாத்தியமா? கடைசியில் முதல்வர் பதவியை ஒதுக்கிவிட்டு ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை முதல்வராக்கும் விஜய், எதிர்க்கட்சி தலைவராக உட்காருகிறார். அவர் நிஜத்தில் அரசியலுக்கு வந்தாலும் இதையே செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மொத்தத்தில் துப்பாக்கி  , கத்தி போன்ற சூப்பர் படமும் இல்லை, ஸ்பைடர் போன்ற மொக்கை படமும் இல்லை. சுமாரான படம். ரூ.500, ரூ.1000 கொடுத்து அவசரப்பட்டு யாரும் பார்க்க வேண்டாம், அந்த அளவிற்க் வொர்த் இல்லை. இந்த சர்காரால் ஆட்சி அமைக்க முடியாது

2.5/5