திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (18:28 IST)

புரியாத புதிர் – விமர்சனம்

ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புரியாத புதிர்’. முதலில் ‘மெல்லிசை’ என்று தலைப்பு வைக்கப்பட்ட படம், பின்னாளில் ‘புரியாத புதிர்’ என மாற்றப்பட்டது. ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.


 
 
நண்பனின் இசைக் கருவிகள் விற்கும் கடையைப் பார்த்துக் கொள்ளும் விஜய் சேதுபதிக்கு, இசையில் அதிக ஆர்வம். இசைக் கல்லூரியில் படித்த அவருக்கு, ஆல்பம் போடுவதில் விருப்பம். ஒருநாள் சிக்னலில் நின்றிருக்கும்போது பஸ்ஸில் இருக்கும் காயத்ரியைப் பார்த்ததும் இனம்புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது.
 
அந்த காயத்ரி, விஜய் சேதுபதி இருக்கும் கடைக்கே வருகிறார். அவர் ரெட் கலர் வயலின் ஆர்டர் செய்ய, டோர் டெலிவரிக்காக காயத்ரி வீட்டுக்கே நேரடியாகச் செல்கிறார் விஜய் சேதுபதி. அடுத்தடுத்த சந்திப்பில் அது காதலாக மாறுகிறது.
 
திடீரென காயத்ரியின் அந்தரங்க புகைப்படம் ஒன்று விஜய் சேதுபதியின் வாட்ஸ் அப்புக்கு வருகிறது. பதறித் துடிக்கும் விஜய் சேதுபதி, அந்த நம்பர் யாருடையது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இன்னொரு நாள், ட்ரையல் ரூமில் காயத்ரி ஆடை மாற்றும் வீடியோ ஒன்று வருகிறது.

இடையில் விஜய் சேதுபதியின் நண்பன் ஒருவன் தற்கொலை செய்துகொள்ள, இன்னொருவன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படுகிறான். அடுத்து காயத்ரி குளிக்கும் வீடியோ ஒன்றுவர, கடைசியில் விஜய் சேதுபதி – காயத்ரியின் கட்டில் வீடியோவே வந்துவிடுகிறது. இதற்கெல்லாம் காரணம் யார் என்று தெரிய வரும்போது, விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ் க்ளைமாக்ஸ்.
 
வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும், கடைசிவரை அந்த சஸ்பென்ஸை கெட்டியாக வைத்திருக்கிறார் ரஞ்ஜித் ஜெயக்கொடி. முக்கியமான விஷயம், மூன்று வருடங்களுக்கு முன்பே இந்தப் படம் எடுக்கப்பட்டாலும், தற்போதைய காலகட்டத்திற்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
 
வழக்கம்போல விஜய் சேதுபதி ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸாகிறார். பெண்ணின் அந்தரங்கப் புகைப்படம் வாட்ஸ் அப்பில் வந்தது என்று போலீஸிடம் கூட சொல்லத் தயங்கும் அந்த காட்சி, பெண்களின் மீது அந்த கேரக்டர் வைத்திருக்கும் மரியாதையைக் காட்டுகிறது. ஒவ்வொரு முறை வீடியோ வரும்போதும், அந்தப் பதற்றத்தை அப்படியே நமக்கு கடத்துகிறார்.
 
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ வெற்றியால், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் காயத்ரி. வேறு யாராவது நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அவ்வளவு மேக்கப்பையும் மீறி எப்போதும் துருத்திக் கொண்டிருக்கிற பருக்களால், அவர் அழகைக்கூட ரசிக்க முடியவில்லை.
 
கொஞ்ச நேரமே வந்தாலும், படத்தில் சொல்வது போல இறக்கை முளைக்காத தேவதையாகக் காட்சியளிக்கிறார் மஹிமா நம்பியார். படத்தை முழுவதுமாகத் தூக்கிச் சுமப்பது விஜய் சேதுபதி மட்டும்தான். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ‘விக்ரம் வேதா’ அளவுக்கு இல்லையென்றாலும், சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசை ஓகே ரகம்தான். பாடல்கள் மனதில் ஒட்டவில்லை.
 
அடுத்தவர்களின் அந்தரங்கத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்து இன்பமடையும் எல்லோருக்கும் சாட்டையைச் சுழற்றியிருக்கிறார் இயக்குநர். அனைவரும் அவசியம் பார்த்து, திருந்த வேண்டிய படம் ‘புரியாத புதிர்’.