1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வெள்ளி, 6 ஜூலை 2018 (21:04 IST)

Mr.சந்திரமெளலி திரைவிமர்சனம்

சென்னையில் உள்ள பிரபல கால்டாக்ஸி நிறுவனத்தை நடத்தி வருபவர் மகேந்திரன். ஏழாவது முறையாக சிறந்த தொழிலதிபர் விருதினை பெறும் இவரிடம் இன்னொரு கால்டாக்ஸி நிறுவனத்தை நடத்தி வரும் சந்தோஷ் பிரதாப் வந்து அடுத்த ஆண்டு இந்த விருதை நான் வாங்குவேன் என்கிறார். தன்னிடம் இருந்து தொழில் கற்ற ஒருவர் தன்னையே மிஞ்சுவதாக சவால் விடும் சந்தோஷ் பிரதாபன் மீது மகேந்திரன் செய்யும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதும், இதனால் பாதிக்கப்பட்ட கவுதம் கார்த்திக் எடுக்கும் ஆக்சன் அவதாரம் தான் இந்த படத்தின் கதை
 
கவுதம் கார்த்திக்கின் நடிப்பில் எந்த இடத்திலும் குறை சொல்ல முடியவில்லை. அவரது எனர்ஜி அவருக்கு மிகப்பெரிய பிளஸ் ஆகவுள்ளது. தந்தையிடம் பாசத்தை பொழிவதாகட்டும், காதலி ரெஜினாவிடம் ரொமான்ஸ் செய்வதாகட்டும், ஆக்சன் காட்சிகளாட்டும், கவுதம் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
 
முதல் பாடலில் நீச்சலுடையுடன் கூடிய கவர்ச்சியில் தோன்றும் நாயகி ரெஜினா, அடுத்தடுத்து ஒருசில ரொமான்ஸ் மற்றும் சீரியஸ் காட்சிகளில் அசத்துகிறார். ரெஜினாவுக்கு இந்த படம் அவரது கேரியரில் முக்கியமான படம்தான்
 
நவரச நாயகன் கார்த்திக்கை இன்றைய தலைமுறை இயக்குனர்கள் சரியாக பயன்படுத்துவதில்லை என்பது பெரிய குறையே. அனேகன் படத்தில் ஓரளவு அவரது திறமை வெளிப்பட்டது. ஆனால் 'தானா சேர்ந்த கூட்டம்' போலவே இந்த படத்திலும் அவரை வேஸ்ட் ஆக்கியுள்ளனர். கவுதம் மீது அவர் பொழியும் பாசக்காட்சிகளில் செயற்கை அதிகம்
 
சதிஷ் பொதுவாக தனது படங்களில் மொக்கை காமெடியாவது செய்வார். இந்த படத்தில் அதுவும் இல்லை. அவர் ஏன் இந்த படத்திற்கு என்ற கேள்விதான் எழுகிறது
 
கார்த்திக்கை போலவே மகேந்திரனையும் இந்த படத்தில் வேஸ்ட் ஆக்கியுள்ளனர். இவர் நல்லவரா? கெட்டவரா? என்பது கடைசி வரை பார்வையாளர்களுக்கு தெரியவில்லை. சந்தோஷ் பிரதாப் நடிப்பு மிக கச்சிதம்.
 
இயக்குனர் அகத்தியன் தோன்றும் ஒருசில காட்சிகள் திருப்தியாக உள்ளது. ஆனால் சிறப்பு தோற்றத்தில் வரும் வரலட்சுமியின் கேரக்டர் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இவர் கார்த்திக்கை நண்பராக பார்க்கின்றாரா? அப்பாவாக பார்க்கின்றாரா? காதலராக பார்க்கின்றாரா? என்ற குழப்பம் படம் முடிந்து வெளியே வரும் வரை தீரவில்லை
 
சாம் சிஎஸ் இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும் பின்னணி இசை சொதப்பியுள்ளார். ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு சூப்பர். குறிப்பாக தண்ணீருக்கடியில் பாடல் காட்சி ஏ கிளாஸ் ரகம்
 
இயக்குனர் திரு படங்கள் என்றால் சஸ்பென்ஸ், த்ரில் கலந்த ஆக்சன் படமாகத்தான் இருக்கும். இந்த படத்தில் சஸ்பென்ஸ் தவிர அனைத்து மிஸ்ஸிங். உண்மையான வில்லன் யார் என்பதை மட்டும் கடைசி வரை யாருமே ஊகிக்காத வகையில் திரைக்கதையை கொண்டு சென்றுள்ளார். ஆனால் கார்ப்பரேட் உலகின் போட்டி குறித்த அழுத்தமான காட்சிகள் இல்லை. ஏதோ ஒன்று மிஸ் ஆவது போன்ற பிரமை உள்ளது. 
 
மேலும் கார்த்திக்-கவுதம் காட்சிகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை.. மீண்டும் மீண்டும் ஒரே காட்சிகள் ரிப்பீட் ஆவதை போன்று உள்ளது. காரை பத்மினி என்று கார்த்திக் அழைப்பதும் அதை கொஞ்சுவதும் நாங்கள் 'படிக்காதவன்' படத்திலேயே பார்த்துவிட்டோம். கார்த்திக்-கவுதம் தந்தை-மகன் பாசம், கவுதம் -ரெஜினாவின் காதல், கார்ப்பரேட் உலகின் போட்டி, குத்துச்சண்டை வீரனுக்கு ஏற்படும் அனுபவங்கள் என ஒரே படத்தில் பல கதைகள் டிராவல் செய்வதால் எதையும் முழுதாக உருப்படியாக கூறமுடியாத நிலையில் தான் இந்த படம் உள்ளது.
 
மொத்ததில் மிஸ்டர் சந்திரமெளலி மந்திரம் போட்டாலும் எடுபடாத வகை படமாகத்தான் உள்ளது
 
2.25/5