1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: திங்கள், 7 மார்ச் 2016 (10:36 IST)

கலாபவன் மணி - மறக்க முடியாத கலைஞன்

கலாபவன் மணி - மறக்க முடியாத கலைஞன்

கலாபவன் மணியின் மரணத்தை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 45 வயதில் மரணம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை. அதுவும், இறப்பதுக்கு முன்புவரை நடித்துக் கொண்டிருந்த ஒருவர்.


 
 
கலாபவன் மணியின் திரைப்பட வெற்றி என்பது சாமானியர்களின் வெற்றி. திறமையிருப்பவன் யாராக இருந்தாலும் திரைத்துறையில் சாதிக்க முடியும் என்பதற்கு மணி ஒரு வாழும் உதாரணமாக இருந்தார்.
 
மணியின் பூர்வீகம் கேரளாவிலுள்ள சாலக்குடி. ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையை தொடங்கிய மணியின் மிமிக்ரி திறமையை கொச்சியிலுள்ள கலாபவன் மிமிக்ரி ட்ரூப் பட்டை தீட்டியது. இந்த ட்ரூப்பிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான் இயக்குனர்கள் சித்திக், லால், ஜெயராம் போன்ற பல கலைஞர்கள். கலாபவனும், ஹரிஸ்ரீயும் கேரள மிமிக்ரி கலைஞர்களின் தாய் வீடுகள் எனலாம்.
 
1995 -இல் அக்ஷரம் படத்தில் நடிப்பதற்கு முன், கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பே கலாபவன் மணி ஒருசில படங்களில் தலைகாட்டினார். 
 
ஆனாலும், அக்ஷரம்தான் அவரது முதல் படமாக ரசிகர்கள் மனதில் தங்கியுள்ளது. அதற்கு அடுத்த வருடம் வெளிவந்த சல்லாபம் படம் கலாபவன் மணி என்ற நடிகனை அடையாளம் காட்டியது. மஞ்சு வாரியர் அறிமுகமான இந்தப் படத்தில் திலீப் நாயகனாக நடித்திருந்தார். மணிக்கு சின்ன வேடம். 
 
ஆனாலும், யார் இந்த நடிகன் என்று பார்வையாளர்களை கேட்க வைத்தார் மணி. அதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
 
மணியின் திரை வாழ்க்கையில் 2000 -ஆம் ஆண்டு முக்கியமானது. அவர் கண் தெரியாதவராக நடித்த, வாசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் கேரளாவில் வெற்றிகரமாக ஓடியதுடன் மணிக்கு நடிப்புக்கான சிறப்பு ஜுரி தேசிய விருதையும், கேரள அரசின் சிறந்த நடிகருக்குமான விருதையும் பெற்றுத் தந்தது. இந்தப் படம் காசி என்ற பெயரில் தமிழில் விக்ரம் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
 
நகைச்சுவை வேடங்களிலிருந்து குணச்சித்திரம், வில்லன் என்று வேறு தளங்களுக்கு மணி செல்ல ஆரம்பித்தார். தமிழில் அவரது வரவு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்துடன் அமைந்தது. ஜெமினி படத்தில் மிமிக்ரியுடன் அவர் செய்து காட்டிய வில்லத்தனங்கள் மறக்க முடியாதவை. 
 
தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் தனக்கேயான முத்திரையை மணி பதிக்க தவறியதில்லை. ஆமென் படத்தில் வயதான இசைக்கலைஞனாக அவரது நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. வயதான மேக்கப்பிலும், அதற்கு உயிரூட்டிய நடிப்பிலும் நாம் மணிக்குப் பதில் ஒரு இசைக்கலைஞனையே பார்த்தோம். 
 
பாபநாசம் படத்தில் அவரது குரலும், அதிலுள்ள கம்பீரமும் அப்படியே இருந்தாலும், நோய் அவரது தோற்றத்திலிருந்த கம்பீரத்தை குலைக்க ஆரம்பித்திருந்தது. அவரது மரணம் எதிர்பாராதது. அவரது நாடன் பாட்டுகளும், மாப்பிள்ள பாட்டுகளும், ஆன்மீக பாடல்களும் மணி என்ற சாலக்குடிக்காரனின் அடையாளமாக இருந்தன. மேடையில் தனது நாடன் பாட்டுகளால் நம்மை மகிழ்வித்த அந்த கலைஞன் 45 வயதிலேயே நம்மைவிட்டு போனது பேரிழப்பு.