1. ப‌ல்சுவை
  2. காதல் தேசம்
  3. டிப்ஸ்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (09:30 IST)

Propose Day! உங்கள் காதலை எப்படி சொன்னால் ஓகே ஆகும்? சில டிப்ஸ்!

Love
காதலர் தின வாரத்தின் இரண்டாம் நாளான காதலை சொல்லும் Propose Day காதலர்களுக்கு முக்கியமான தினமாக உள்ளது.

காதல் மனிதர்களுக்கு நிகழும் அழகான, வித்தியாசமான ஓர் உணர்வு மாற்றம். ஒருவர் மீதான அந்த காதலை உள்ளூர ரசிக்கும் நாம் அதை அவர்களிடம் சொல்ல பல்வேறு தயக்கங்களை கொண்டிருப்போம். அதுபோன்ற தயக்கங்களை விட்டு அவர்களிடம் மன விருப்பத்தை சொல்வதற்காக அமைந்ததே இந்த Propose Day. இது காதலர் தின வாரத்தின் இரண்டாவது நாள் (பிப்ரவரி 8) கொண்டாடப்படுகிறது.

இந்த காதலை சொல்லும் நாள் புதிதாக காதலை சொல்பவர்களுக்கு மட்டுமல்ல, திருமணமான தம்பதியர் கூட தங்கள் காதலை வெளிப்படுத்த கூடிய நாள். இந்த நாளில் எப்படி தங்கள் காதலை இணையருக்கு சொல்லலாம் என்பதை பார்ப்போம்.
காதலை சொல்வதற்கு முன்னர் அது குறித்த யூகங்கள் உங்கள் காதலன்/ காதலிக்கு தோன்றாதபடி சர்ப்ரைஸாக செய்யுங்கள்.

புதிதாக காதலை சொல்ல செல்பவர்கள் தங்கள் காதலன்/காதலிக்கு அவர்களுக்கு பிடித்த ஒரு பொருளையோ அல்லது மோதிரமோ வாங்கி சென்று அதை அன்பளிப்பாக அளித்து காதலை தெரிவிக்க வேண்டும்.

நாம் காதலை சொன்னதும் அவர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள் என்ற முழு நம்பிக்கையோடு செல்ல வேண்டாம். அவர்கள் காதலை ஏற்க மறுத்தாலும் அதை இன்முகத்தோடு நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்கள் மீதான மதிப்பும், நம்பிக்கையும் அவர்களுக்கு கூடும். பதிலளிக்க அவகாசம் கேட்டாலோ, குழப்பத்தில் இருந்தாலோ அவர்களை அமைதிப்படுத்தி பொறுமையாக பதில் சொல்ல சொல்லிவிட்டு அவர்களை தொல்லை செய்யாமல் இருங்கள்.
Love

மிகவும் உறுதியாக இருவருக்குமே காதல் இருக்கும் பட்சத்தில் ப்ரொபோஸ் செய்யும்போது வெறுமனே “ஐ லவ் யூ” என்று மட்டும் கூறாமல், அவர்களது ஆசைகள், கனவுகளுக்கு உற்ற துணையாக இருக்கும் வகையில், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான வார்த்தைகளை கூறி காதலை தெரிவியுங்கள்.

காதலை சொல்வதற்கு இடம், நேரம் முக்கியம். அழகான காலை அல்லது மாலை வேளையில் அமைதி சூழ்ந்த இடத்தில் தெரிவிக்கப்படும் காதல் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

காதலை தெரிவிக்கும் முன்னர் அவர்களிடம் சில வார்த்தைகள் பேசி காதலன்/ காதலி வேறு ஏதாவது சோகத்தில் இருக்கிறார்களா அல்லது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொண்டு பின்னர் மெல்ல காதலை சொல்வது சிறந்தது.

காதலை முன்மொழிவதற்கு அழகான பூங்காக்கள், அமைதியான ரெஸ்டாரண்டுகள் உள்ளிட்டவை சிறந்தவை.
Proposal Day

நேரில் பார்க்க முடியாத சூழலில் இருந்தால் போனில் அழைத்து இனிமையான வார்த்தைகள் மூலமாவது காதலை தெரிவியுங்கள். வாட்ஸப் மெசேஜில் ஹார்ட்கள் போட்டு வெறும் மேசேஜாக காதலை வெளிப்படுத்தாதீர்கள்.

திருமணமான தம்பதிகள் தங்கள் இணையருக்கு பிடித்த பொருட்களை இந்நாளில் பரிசளித்து, தான் என்றென்றும் அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்தலாம். அருகில் திரையரங்கு, ரெஸ்டாரண்ட் அல்லது மனநிறைவை அளிக்கும் வகையில் கோவிலுக்கு சென்று வாருங்கள். இருவருக்கும் இடையே ஏதேனும் பிரச்சினைகள் இருக்கும்பட்சத்தில் அவற்றை பேசி சரி செய்து கொள்ளவும் இது நல்ல நேரம்.

காதலும், காதலிப்பதும் அழகானதுதான் அது இருவருமே மகிழும்படி அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் காதலும் உறுதியாக பல காலம் நீடிக்கும்.