திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (15:24 IST)

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பா.ஜ.க மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வாக்களித்தார்!

பா.ஜ.க மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் ஜனநாயக கடமை ஆற்றி விட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
 
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி வேட்பாளராக களத்தில் நின்று கொண்டு இருக்கிறார்கள்.
 
அத்தனை தரப்பு மக்களும் மோடி மீது நல்ல அபிப்பிராயம் கொண்டு உள்ளனர். நேர்மையான, திறமையான ஆட்சியை பிரதமர் மோடி தந்து உள்ளார். மக்கள் தரும் ஆதரவு எங்களது உற்சாகத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது. 
 
பா.ஜ.க விற்கு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் மாற்றி காட்டும். கிராமம் மற்றும் நகரங்களில் ஒரே மாதிரியான ஆதரவு பா.ஜ.க விற்கு கிடைக்கும்.
கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு கிடைக்கும் ஆதரவு, கோவையில் தாமரை மலரும் என்ற நம்பிக்கையை‌ ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை லட்சக் கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கோவை பா.ஜ.க விற்கு ஆதரவான தொகுதி. இந்த பகுதி முழுக்க பாஜக கணிசமான வாக்கு வங்கியை கொண்டு உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க வாக்கு வங்கி பல மடங்கு அதிகரிக்கும். கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார். மூன்றாவது முறையாக பிரதமர் ஆட்சியமைக்கையில் பா.ஜ.க வின் 400 எம்.பி.க்களில் இவரும் ஒருவராக இருப்பார்.
 
கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியில் தேர்தல் செலவிற்காக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்க வைத்து இருந்த பணத்தை அதிகாரிகள் பிடித்து கொண்டு, பா.ஜ.க வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பொய் செய்தி பரப்புகிறார்கள். பல்வேறு இடங்களில் தேர்தல் ஆணையம் உத்தரவுபடி அதிகாரிகள் நடக்கவில்லை. வெளிப்படையாக தி.மு.க., அ.தி.மு.க வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். அதுகுறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க வினர் பணம் கொடுப்பது வெளியே வராமல் இருக்க, ஆட்களை செட் பண்ணி பா.ஜ.க பணம் கொடுத்தது போல திசை திருப்பி விடுகிறார்கள். கோடிக் கணக்கான ரூபாய் பணத்தை கொட்டி கொடுத்தாலும் கோவையில் தாமரை மலரும்” எனத் தெரிவித்தார்.