வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2024 (12:35 IST)

இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்.! தலைவர்கள் - வேட்பாளர்கள் இறுதிகட்ட பரப்புரை..!!

Leaders Campain
மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி  21 மாநிலங்களில் நடைபெற உள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
 
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைவதால் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் வெயிலையும் கொடுமையிலும் பிற்படுத்தாமல்  வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். 
 
தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி அரசியல் தலைவர்களும் அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
 
Election Commision
இதனிடையே பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு முடியும் வரை நடைமுறையில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.
 
அதன்படி இன்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு தொடர்பு இல்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள், வாக்காளர்கள் அல்லாதோர், தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளார்களா என்று ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்கள் நடத்தக்கூடாது எனவும், அவற்றில் பங்கேற்கக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி வாயிலாகவும் அரசியல் கட்சிகள் பரப்புரை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மக்களை ஈர்க்கும் வகையில் எந்தவொரு இசை நிகழ்ச்சி, பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் கூடாது என்றும், மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொண்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபாரதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் அரசியல் கட்சிகளுக்கான நட்சத்திர பேச்சாளர்களின் வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணிக்கு பின் காலாவதியாகிவிடும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.