திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2024 (13:38 IST)

நம்முடைய ஓட்டு புனிதமானது..! திமுக ஆட்சியின் அவலத்தை தோலுரித்து ஈபிஎஸ் கடிதம்...!!

edapadi
திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதுதொடர்பாக அதிமுக தொண்டர்களுக்கும், வாக்காளர்களுக்கும்  அவர் எழுதியுள்ள கடிதத்தில், உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயகத் திருவிழா’ என்று கொண்டாடப்படும் இந்தத் தேர்தலில், மக்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்து, ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என்பது தான் உங்கள் முன் வைக்கும் மிக முக்கியமான கோரிக்கை. நம்முடைய ஓட்டு புனிதமானது; நம்முடைய ஓட்டு விலை மதிப்பிட முடியாத அளவு உயர்ந்தது. எனவே, வாக்களியுங்கள்.

அப்படி வாக்களிக்கும் முன் நமக்கான இயக்கம், நமக்கான ஆட்சி எது? எந்தக் கட்சி ஏழை, எளிய, நடுத்தர, உழைக்கும் மக்களுக்கு ஊன்றுகோலாகவும், உதவும் நண்பனாகவும் இருக்கிறது என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்த்து வாக்களியுங்கள். தெளிந்த சிந்தனையும், பரந்த உள்ளமும் கொண்ட உங்கள் வாக்கு இந்த தேசத்தில் அன்பும், அமைதியும் பெருகிட உதவட்டும்.
 
விடியா திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. திமுக ஆட்சியாளர்களுடைய அவலங்களில் ஒருசிலவற்றை, வாக்காளப் பெருமக்களாகிய உங்களுக்கு சுட்டிக் காட்டுவது எனது கடமை எனக் கருதுகிறேன்.
 
>2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகள் உள்ளிட்ட, 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து, கவர்ச்சியாகப் பேசி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக இன்றுவரையிலும், பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அந்தர்பல்டி அடித்து, திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாக வெற்றுத் தம்பட்டம் அடித்துக்கொண்டும்; விளம்பரங்களின் மூலமும் மக்களை ஏமாற்றி வருகிறது.
 
> திமுக ஆட்சியில், மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகள், மளிகைப் பொருட்கள், அரிசி உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்துள்ளது
 
> மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு வரி உயர்வு, குப்பைக்கு வரி, அரசின் அனைத்து கட்டணங்களையும் பலமடங்கு உயர்த்தி உயர்த்தியது திமுக அரசு
 
> கட்டுமானப் பொருட்கள் விலை பலமடங்கு உயர்ந்ததால், ஏழை எளிய நடுத்தர மக்களின் சொந்த வீடு என்ற குறிக்கோள், கனவாகவே மாறியது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
> தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், தனியாக வசிக்கும் முதியவர்களை குறி வைத்து தாக்குதல், வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. புதிதாக வெடிகுண்டு கலாச்சாரமும் தமிழகத்தில் பரவியுள்ளது. ஆளும் கட்சியினரின் அராஜகங்கள் உள்ளிட்ட அனைத்தையும், திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டும் காணாமல் இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
 
 
>திமுக ஆட்சியில், தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறியுள்ளது. இளைஞர்களையும், மாணவர்களையும் போதைக்கு அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு தமிழகத்திற்கு சர்வதேச அளவில் தலைகுனிவையும் ஏற்படுத்தி உள்ளனர் திமுக நிர்வாகிகள்.
 
> திமுக அரசின் அமைச்சர்கள், வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களை பல்வேறு வகைகளில் அச்சுறுத்தியும், கொச்சைப்படுத்தியும் பேசி வருவது அராஜகத்தின் உச்சம்.
 
> முதலமைச்சரின் மகனும், மருமகனும், சுமார் 30 ஆயிரம் கோடிக்கு மேல் ஒரே ஆண்டில் முறைகேடாக சேர்த்திருக்கிறார்கள் என்று முன்னாள் நிதி அமைச்சர், தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பேசிய ஆடியோ பதிவிற்கு முதலமைச்சர் இதுவரை எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
 
> திமுக ஆட்சியில், பல்வேறு துறைகளில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. தங்களது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஊழல் செய்த பணத்தை சினிமா துறை மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.
 
> திமுக ஆட்சியில், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காவு கொடுத்து வருவது. இரண்டுமுறை மின் கட்டண உயர்வு, நூல் விலை கடுமையாக உயர்வு, பீக் அவர் கட்டணம் என்று பல்வேறு சுமைகளை தொழில்துறையில் சுமத்தியதன் காரணமாக இன்று தமிழகத்தின் தொழில்துறை அதாள பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது.
 
> எங்களது ஆட்சியில் மக்கள் நலனை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. பல திட்டங்களை நிறுத்தியது, பல திட்டங்களை ஆமை வேகத்தில் செய்கிறது இந்த திமுக அரசு.
 
> மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, அவர்கள் ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் சிறப்பு திட்டங்கள் எதையும் 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை முழுமையாக வழங்குவதில்லை. இயற்கை சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை வழங்காதது மட்டுமின்றி, மத்தியக் குழுவை காலங்கடந்து அனுப்புதல். தமிழகத்திற்கு சேர வேண்டிய இந்த நிதியை பெற வக்கில்லாத அரசாக திமுக அரசு உள்ளது.
 
> 2014-ல் பாஜக ஆட்சி மத்தியில் அமையும்போது, பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ. 71. டீசல் 1 லிட்டர் விலை ரூ. 55. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 105 டாலர். 2024-ம் ஆண்டு பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 102. டீசல் ஒரு லிட்டர் விலை ரூ. 94. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 86 டாலர். 2014-ல் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை அதிகமாக இருக்கும் போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவாக இருந்தது.
 
இதுவே 2024, பாஜகவின் ஆட்சியில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் பேரல் விலை குறைவாக இருக்கும் போது, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் அரசு அதிகளவில் மேல்வரி விதித்ததுதான். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
 
தமிழகத்தில் திமுக அரசு 2021-ல் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்தது. விற்பனை வரியைக் குறைத்து விலையைக் குறைத்திருக்காலாம். ஆனால், அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 2024 தேர்தல் அறிக்கையிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், தமிழக மக்கள் இதனை நம்பத் தயாராக இல்லை.
 
> எங்களது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து, அனைத்துத் தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து கேட்டறிந்து, அதிமுகவால் நிறைவேற்ற முடிகின்ற வாக்குறுதிகளை நாங்கள் 2024, நாடாளுமன்றத் தேர்தலில் அறிவித்திருக்கிறோம். உதாரணமாக, ஏழை குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 3,000 ஊக்கத் தொகை, சொந்த வீடு இல்லாமல் அவதியுறும் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா குடியிருப்பு வழங்கும் திட்டம், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மாத அடிப்படையில் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யவும், அதற்கு காலாண்டு அடிப்படையில் ஜிஎஸ்டி கட்டணத்தைச் செலுத்துதல், போன்ற பல வாக்குறுதிகளை அறிவித்துள்ளோம். எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவார்கள்.

 
தமிழகத்தில் அதிமுகவின் 30 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஏராளம், ஏராளம். பெண் கல்வி வளர்ச்சி, வறுமை ஒழிப்பின் முதல்படி. ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகப் போற்றப்படுவது, அதிமுகவின் அடிப்படையான கொள்கை. பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை; பெண்கள் படிப்பதற்கென்று தனிப்பட்ட சலுகைகள்; படித்த பெண்களுக்கு ரொக்கமாகவும், தங்கமாகவும் உதவித் தொகை; பெண்களுக்கு உதவ வீட்டு உபயோக மின்சார சாதனங்கள்; பெண்களுக்கு பெரிதும் பயன்பட்ட அம்மா உணவகங்கள் போன்ற புரட்சிகரமான திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட, அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுக்கு கொள்கை விளக்கக் குறிப்புகளை தங்கள் நாடாளுமன்ற செயல்பாடுகள் மூலம் எடுத்துரைப்பார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.