தேர்தலை புறக்கணிக்கும் பரந்தூர் மக்களுடன் பேச்சுவார்த்தை..! சத்யபிரதா சாஹூ தகவல்..!!
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ள கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பரந்தூர், வளத்தூர், நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மேல்பொடவூர், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி, அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம் உள்ளிட்ட 20 கிராமங்களை உள்ளடக்கி 5,746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களது போராட்டம் 600-வது நாளை கடந்துள்ள நிலையில் மத்திய அரசோ, மாநில அரசோ பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ள கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.