ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2024 (17:12 IST)

வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்..! பச்சிளம் குழந்தை பலி..! மேலும் 14 குழந்தைகள் பாதிப்பு..!

hospital
உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து 15 பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.கிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள மொக்கத்தான்பாறை கிராமத்தில் சுமார் 100க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
 
இந்த கிராமத்தில் வசிக்கும் முத்தையா என்பவரது 3 வயது மகனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில்  ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சுமார் 14 பச்சிளம் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதை கண்டு கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 
child admitted
உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 8 குழந்தைகளும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 குழந்தைகளும் கடந்த ஓரிரு நாட்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில், இன்று ஒரே நாளில் மேலும் 4 பச்சிளம் குழந்தைகள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
மர்ம காய்ச்சலால் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் மேலும் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அந்த கிராமத்திற்கு செல்லவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

 
மர்ம காய்ச்சலை தடுக்க தங்கள் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.