திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (12:14 IST)

தெலுங்கு தேசம் வெற்றி பெற்றால் மாதந்தோறும் ரூ. 4 ஆயிரம் உதவித் தொகை..! சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு..!!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 
 
ஆந்திராவில் மே 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
 
இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடி உயிர் துறந்தவர் மகாத்மா ஜோதிராவ் பூலேவின் கனவுகள் நனவாக, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்ததும், பிற்படுத்தப்பட்டோரின் நலன்களைக் காக்க பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம்  என்று தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
 
50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் ரூ.1.50 லட்சம் கோடியில் பி.சி. சப்-பிளான் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
சொந்த தொழில் புரிய 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் பி.சி.க்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பி.சி.க்கு நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.