ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2024 (12:43 IST)

ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே உடன்பாடு..! எந்தெந்த மாநிலங்களில் யாருக்கு எத்தனை தொகுதிகள்..?

AAP Congress
மக்களவைத் தேர்தலில் டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால்  அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. 
 
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி பல்வேறு வியூகம் மேற்கொண்டு வருகின்றன.
 
இந்நிலையில்  டெல்லி, குஜராத் மாநிலங்களில் ஆம் ஆத்மியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிடவுள்ளது. இதற்காக 2 மாநிலங்களிலும் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது. 
 
டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடவுள்ளது. டெல்லியில் டெல்லி கிழக்கு, மேற்கு, தெற்கு, புதுடெல்லி தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் கட்சி வடமேற்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, சாண்டிசவுக் தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. கடந்த 2019 தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் குஜராத்திலும் தொகுதிப் பங்கீட்டை ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி உறுதி செய்துள்ளது. கோவா, சண்டிகர், ஹரியாணாவிலும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் இதுதொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
 
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் போட்டியிடும். மீதமுள்ள இடங்களில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை களமிறக்கும் என்று தெரியவந்துள்ளது.  அரியானாவில் காங்கிரஸ் ஒன்பது இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.

 
மேலும் சண்டிகரில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி களமிறங்கும். கோவாவில் உள்ள இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.