ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு... திமுக - மதிமுக தொகுதி பங்கீடு கையெழுத்து..!
மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், திமுக மதிமுக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் எனவும், தனிச்சின்னத் தில்தான் போட்டியிடுவோம் என்றும் திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் மதிமுக தெரிவித்திருந்தது.
ஆனால் திமுக தரப்பிலோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறி வந்தனர். இதனால் மூன்று கட்டமாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், மதிமுகவின் கோரிக்கையை ஏற்க திமுக சம்மதம் தெரிவித்தது. இதை அடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலினும், வைகோவும் கையெழுத்திட்டனர்.
தனிச் சின்னத்தில் போட்டி:
மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கிய தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் தொகுதி நிலவரம் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.