வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: திங்கள், 25 மார்ச் 2019 (12:39 IST)

20 ஆண்டுக் கனவு – வேட்பு மனு நாளில் தமிழிசை உருக்கமானக் கடிதம் !

தூத்துக்குடியில் நிற்க இருக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்திய அளவில் பாஜக மிகப்பெரிய தேசியக் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் அது இன்னமும் கத்துக்குட்டி கட்சிதான். ஆனால் சமீபமாக சில ஆண்டுகளாக தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் முக்கியக் காரணமாகும். அதனால்தான் இந்த ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு அதிகபட்சமாக 5 சீட்டுகள் கிடைத்துள்ளன. அதில் தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை சவுந்தர் ராஜன் போட்டியிடுகிறார். அதற்காக அவர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய இருக்கிறார். அதை முன்னிட்டு தொண்டர்களுக்கு உருக்கமானக் கடிதம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அந்தக் கடிதத்தில் ‘சிறு வயதிலிருந்தே அரசியல் ஆர்வத்தோடு வளர்ந்தவள். நான் பள்ளியில் படிக்கும்போதும், மருத்துவம் படிக்கும்போதும், உயர் மருத்துவம் படிக்கும்போதும், வெளிநாட்டில் மருத்துவம் படித்தபோதும் சரி, அடிமட்ட தொண்டராக, இணைந்து இன்று பாஜகவின் தலைவராக உயர்ந்திருக்கும்போதும் சரி, எனது வாழ்க்கை, கடின உழைப்பு, சமூக அக்கறை, அழகாக பகிர்ந்துகொள்ளும் அன்பு, இயன்ற அளவுக்கு தேவையானவர்களுக்கு உதவி செய்வது, நம்பிக்கையூட்டும் அளவுக்கு கொடுத்த வேலைகளை முழு ஈடுபாட்டுடன் செய்வது என்று என் வேலைகளும் எண்ணங்களும் நேர்மறையாகவே இருக்கும்.

வாழ்க்கை என்பது அன்பும், அழகும், தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் நிறைந்ததாகவே இருக்கும். எனது ஒவ்வொரு நாளும் அதை நிரூபித்துக் கொண்டே இருக்கும். சமூகம் சரிசெய்யப்பட வேண்டும். இந்த பாரதம் உலக அளவில் உயர வேண்டும். பசியற்ற பாரதத்தைக் காண வேண்டும். அனைவரும், மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது வேட்கையாகவே இருக்கும். சமுதாயத்திற்கு தொண்டு செய்ய வேண்டுமென்ற கனல் என்னுள்ளே தகித்துக்கொண்டே இருக்கும்.

இந்தக் கனல் உணவில்லாதவர்களுக்கும் உணவளிக்க உதவும். அதேநேரத்தில் சேற்றை அள்ளி வீசுபவர்களுக்கும் சுட்டெரிக்கவும் செய்யும். என் வாழ்க்கை பயமில்லாததாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. என்னால் அது முடியும், ஏனென்றால், என்மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு. நம்மை படைத்த இறைவன் மீதும் அபார நம்பிக்கை உண்டு.இசை நம்பிக்கையும், இறை நம்பிக்கையும் இணைந்தால், இரும்புத்தன்மை பெறும் என்பது என் நம்பிக்கை.

என்னுடைய பொதுவாழ்வில் 20-வது ஆண்டை தொட்டுவிடக்கூடிய காலக்கட்டத்தில், மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது என் நீண்ட கால கனவு. மக்கள் பிரதிநிதியாக இருந்தால் என் வாழ்க்கை, இன்னும் பலருக்கும் பயன்படும் என்பது மட்டுமல்ல, என் பொது வாழ்வுக்கு ஓர் அங்கீகாரமாக இருக்கும் என்பதற்காகவும் மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதியாக பல வாதங்களை திறமையாக தேவையான நேரத்தில் எடுத்து விளக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’ என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.