லஷ்மி ஸ்டோரா ? கல்யாண வீடா ? – பிரச்சாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கலகல !

Last Modified வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (10:13 IST)
தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களிடம் சீரியல்களின் பெயரை சொல்லி வித்தியாசமாக ஓட்டுக்கேட்டுள்ளார் கார்த்தி சிதம்பரம்.

காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. சிவகங்கை தொகுதியை தனது மகனுக்குத் தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார் ப சிதம்பரம் , ஆனால் காங்கிரஸ் தலைமை உள்ளூர் நிர்வாகிகளிடம் சிதம்பரம் குடும்பத்திற்கு இருக்கும் அதிருப்தியைக் கணக்கில் கொண்டு சீட் கொடுக்க யோசித்தது. ஆனால் ப சிதம்பரம் பதவி விலகுவேன் என மிரட்டி தனது மகனுக்காக சீட் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

அதையடுத்து தன் மகனின் வெற்றிக்காக சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகிறார். கார்த்தி சிதம்பரமும் சிவகங்கை தொகுதியின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் கூடியிருந்த பெண்களைப் பார்த்து ‘ நீங்கள் எல்லாம் கல்யாணவீடு பார்க்கிறீர்களா அல்லது லஷ்மி ஸ்டோர்ஸ் பார்க்கிறீர்களா எனக் கேட்டார்’ பெண்கள் ’செம்பருத்தி’ எனப் பதில் சொல்ல.. அதற்கு ‘ வனஜா பக்கமா ? பார்வதி பக்கமா ?.. ஏனென்றால் 100 ரூபாய் இருந்த கேபிள் கட்டணம் இப்போது 250 ரூபாய் ஆகியுள்ளது. நீங்கள் என்னை வெற்றிப் பெற வைத்தால் நான் மீண்டும் கேபிள் கட்டணத்தைக் குறைத்து தினமும் நீங்கள் வனஜா, பார்வதி சண்டையைப் பார்க்க வைப்பேன். ஏன் நான் செம்பருத்தி பற்றி சொல்கிறேன் என்றால் அந்த சீரியலின் கதாநாயகன் பேரும் கார்த்திதான். நீங்கள் அவரைப்பார்க்கும் போதெல்லாம் என் ஞாபகம் வரவேண்டும்’ எனக் கூறினார்.

கார்த்திக் சிதம்பரத்தின் பேச்சைக் கேட்ட மக்கள் சிரித்து ரசித்து ஆரவாரமாகக் கைதட்டினர்.இதில் மேலும் படிக்கவும் :