செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2019 (11:51 IST)

குற்றவுணர்வுடன் அரசியலுக்கு வந்திருக்கிறேன் – பிரச்சாரத்தில் கமல் பேச்சு !

அரசியலுக்கு தாமதமாக குற்றவுணர்வுடன் வந்திருப்பதாக நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது என முடிவு எடுத்துள்ளார். இதற்காக தங்கள் கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். ஆனால் கோவை, தென் சென்னை அல்லது ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் எதாவது ஒன்றில் போட்டியிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.

இப்போது தனது கட்சி வேட்பாளர்களுக்காக தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் ‘நான் களத்தில் இறங்க மாட்டேன் என சொன்னவர்களுக்கு மூன்றே மாதத்தில் களத்தில் இறங்கி பதில் அளித்தோம். எங்களுக்கு நல்ல யோசனைகள் கொடுப்பதே எங்களின் எதிரிகள் தான். நாங்கள் தனித்து நிற்கிறோம். ஆனால் மற்றவர்கள் எல்லாம் சபரிமலைக்கு செல்லும்போது கூட்டமாக செல்வது போல் கூட்டாக சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கூட்டம் கூடி கலைவது, ஆனால் இது சங்கமம்.

அரசியலில் இறங்கியுள்ளது எனது வாழ்க்கையையே மாற்றியுள்ளது. என்னை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற மக்களுக்காக நான் என்ன செய்தேன் எனக் கேள்வி கேட்டு அந்த குற்றவுணர்ச்சியால் தாமதமாக அரசியலுக்கு வந்துள்ளேன். நான் சினிமா டயலாக் பேசவில்லை. இனி என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான்’ எனப் பேசியுள்ளார்.