வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2019 (14:58 IST)

துரைமுருகன் வீட்டில் ரெய்டு ஏன் ? –பொங்கியெழும் பொன்னார் !

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்துள்ள வருமான வரி சோதனைக் குறித்து பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மார்ச் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல்   8:30 வரை வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார். அதில் ’என் மகன் கதிர் ஆனந்தின் தேர்தல் வெற்றியை திசை திருப்பவே இந்த ஐடி சோதனை’ என்றார். இந்த சோதனையில் ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை துரை முருகன் மறுத்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, வருமான வரித்துறை அதிகாரிகளின் உதவியுடன் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி பழிவாங்கும் போக்கில் நடந்து வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் தோல்வி பயத்தாலேயே பாஜக அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பியபோது ‘அவர்கள் பணத்தை குவித்து வைத்து விநியோகம் செய்வார்கள். அதைத் தடுத்தால் தேர்தல் தோல்வி பயம் என்று கூறுவார்கள். அவர்கள் பணப்பட்டுவாடா பண்ணும் போது அதைத் தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. என் தொகுதியான கன்னியாகுமரியிலும் அவர்கள் வாக்குக்குப் பணம் கொடுத்து வருகிறார்கள். அதனால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.