வாழ்வில் ஏற்றமும் இறக்கமும்!!
ஏற்றம் இங்கும் கொண்டிருந்தால்
என்றா வதோர்நாள் இறக்கமும்தான்
குற்ற மின்றி வந்திடுமே !
சுற்றம் கூடிக் களித்திருந்தால்
வெற்றுக் கூச்சல் வந்திடுமே
அற்றுப் போன தோர்சொந்த
மென்றால் கனமா கிடும்நெஞ்சம்!
கற்கும் பாடம் நினைவில்வை
ஏற்ற மிறக்கு வேண்டிமிங்கு !
மற்ற தெல்லாம் தொலைத்திடுங்கு!!
அதிகாலையில் நாம் நித்திரையிலிருந்து கண்விழிக்கும் நொடிமுதல் இரவும் மீண்டும் படுக்கையில் சயனிக்கும் காலவரைக்கும் நம் புத்தியில் நல்லெண்ணங்கள் கொண்டிருந்தோமென்றால் அனைவரது வாழ்வும் சுகம்பெரும். எண்ணங்களே நம்மையறியாமலே நம்மை வழிநடத்துகிறதென்பதென் கருத்து. நமக்கொரு ஆபத்துவருகிறதெனில் நமது நண்பரை உதவிக்கு அழைக்கும்போது,அவர் வேண்டுமென்ற நமக்கு உதவிசெய்யவிருப்பமில்லாமல் நம்மை விட்டேத்தியாகக் கைவிடுவாரேயானால் அடுத்து,இதேபோல் அவருக்கொரு உதவியென்று வரும்போது, அவரது நண்பர்களுக்கும் நம் பாக்கெட் பணத்திற்கு உளைவைத்துவிடுவாரோ என்ற தயக்கத்திலேயே எந்தவுதவியும் செய்யமுன்வரமாட்டார். நாமொன்று நினைக்க அதுவே நமக்கும் நடக்கும்! இதுதான் காலத்தின் கட்டாயத்த்திற்காக நாம் இதற்கு முன்பே போட்டுவைத்துள்ள நம் குணமெனும் அஸ்திவாரம்.
வாழ்க்கையில் இன்று ஏற்றத்திலிருக்கையில் நாமெல்லாம் மேட்டுமையில் சுகித்திருந்து மீண்டும் ஒருநால் படுத்தபடுக்கையில் கிடக்கும்போது, நாம் மதிக்காதவர்களிடமே நாம் உதவிகேட்கவேண்டிய தேவை வருமேயாயின் நம் முகத்தை எங்கே வைத்துக்கொள்வது?
அதனால் எக்காலத்தில் நிரந்த சாந்தச் சொரூபியாக வைத்துக்கொள்வது நல்லது. பிறந்து செயல்கள் நமக்குக் கோபம் வருமோ இல்லையோ ஆனால் மற்றவர்களில் ஏற்றமும் வளர்ச்சியுமென்பது நமக்குக் கண்முன் வந்துபோகும்போதெல்லாம் அடிமனக் கான்கீரிட்டில் ஒரு காழ்புணர்வுப்பெருக்கான் வந்து நோண்டிக்கொண்டிருக்கும். இந்தப்பொறாமைக்குணத்தை மட்டும் நம்மைவிட்டு அப்புறப்படுத்திவிட்டு அவர்கள் அவ்விடத்திற்கு வருவதற்காக எத்தனை இழப்புகள் எத்தனை உழைப்புகள், எத்தனை கடுமையான பயிற்சியின்வழி இதைப் பெற்றிருக்கிறார்களென்பதை நாமறிய முற்படும்போது முன்னேறியவர்கள் அல்லது முன்னெறிக்கொண்டிருப்பவர்கள் மீது பொறாமையெண்ணம் தோன்றுவதற்குப் பதிலாக மரியாதை கலந்த ஒருவித பிரமிப்புதான் தோன்றும்.
காலச்சுழற்சியில் யார் வேண்டுமானாலும் எந்த இடத்தை வேண்டுமானாலும் அடையலாம். ஏன் நம்முடன் கோழிக்குண்டுவிளையாடிக்கொண்டிருந்த பையன் ஆஸ்கர் விருது வாங்கக்கூடாதா? நம்முடன் கேரம் விளையாடிவர் விளையாட்டில் கோல்ட் மெடல் வாங்கக்கூடாதா? நம்முடன் அமர்ந்து சோறுண்டவர் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சீப் செஃபாக இருக்கக்கூடாதா? நம்முடன் அமர்ந்து குலையா குலையா முந்திரிக்கா விளையாடியவர் இன்று பிரபல பாப் பாடகர் ஆக்கூடாதா? என்றோ ஆசிரியரிடம் அடிவாங்கிய மாணவன் இன்று உயர்ந்த விருதை வெல்லக்கூடாதா?? இதெல்லாம் நடப்பதை யாராலும் தடுக்க முடியாதெனும் போதும் நடந்ததை இப்படி நடந்திருக்கூடாது என நினைப்பதற்கு நாம் யார்? எது நடக்க வேண்டுமோ அது நன்றாக நடக்கிறது…இனியும் நன்றாகவே நடக்கும்!
யானைக்கு தந்தம்போன்று மனிதனின் குணமும் அவனது எண்ணமும் அவனுக்கான உயர்ந்த இடத்தைப்பெற தீர்மானிக்கிறது இந்தச் சமூகத்தில். ஒருவருடன் ஒத்த சிந்தனை அவரோடொத்த நண்பர்களுடன் இசைந்து மேற்கொண்டு முன்னேற்றத்தில் பாதையில் செல்ல வழிவகுக்கிறது. ஆகவே இன்னார் மட்டுமே உயரவேண்டும் இன்னார் உயரக்கூடாதென்று நாம் நினைப்பதை முதலில் நிறுத்திவிட்டு நாம் நினைத்ததை அடைய அல்லது மற்றவர்களைபோல் நாமும் உயர சிறிது உழைப்பெனும் உரத்தைப்போடுவது நம் வாழ்கையில் ஆணிவேரை வேரூன்றச்செய்யும்.
இன்று உயர்ந்திருப்பவர் ஒருநாள் எதாவதொரு சந்தர்பத்தில் இறங்கவேண்டிய நிலைவரும் என்பதையறிந்து எப்போதும் இறுமாப்பின்றி தாழ்மையின்றி பணிவுடன் நடப்பது அவரை வாழ்வாங்கு வைக்கும்.
எனவே வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் காலையில் தோன்றும் சூரியன் மாலையில் மறைவதைப்போன்று இயற்கையானது என்பதை அறிந்து மகிழ்வுடன் வாழ்வோம்.
வருவதை ஏற்றுச் சிறப்புடன் வாழ்வோம்…
சினோஜ்