வியாழன், 26 டிசம்பர் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.லெனின் அகத்தியநாடன்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 17 நவம்பர் 2016 (17:45 IST)

நீங்கள் கண்ணீர் விடுவது இருக்கட்டும்; ஏழைகளின் கண்ணீர் தெரிகிறதா மோடி அவர்களே?

கடந்த 08ஆம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.


 

இதனால், பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய செலவுகளுக்கே கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளையும் சில்லறையாக மாற்றுவதில் பெரும் சிரமம் நீடித்து வருகிறது.

100 ரூபாய் மட்டுமே செல்லும் என்பதால், 100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படவில்லை.

இந்நிலையில், இதுவரை 4,500 ரூபாய் வரை பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்த மத்திய அரசு, தற்போது ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 2,000 ரூபாய் வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

இந்த அக்கப்போர்கள் ஒருபுறம் இருக்க, கடந்த சில தினங்களுகு முன்பு மோடி ஆற்றிய உரையில், ”கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கை இது. ஆனால் சிலர் இதை புரிந்து கொள்ளவில்லை.

நவம்பர் 8 ம் தேதி நிறைய மக்கள் இந்தியாவில் அமைதியாக தூங்கினர். சில இடங்களில் சிலர் மட்டுமே இப்போது வரை உறக்கமின்றி அலைகின்றனர். கறுப்பு பணத்தால் நேர்மையான மக்கள் பாதிக்கப்படுவதில் இருந்து காப்பதற்கே இந்த முக்கிய நடவடிக்கை.

70 ஆண்டுகளாக இருந்த கறுப்பு பண நோய் 17 மாதத்தில் தீர்ந்து விட்டது. மக்கள் கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்” என்று கண்ணீர் விட்டு கதறி அழுது ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.

அவரது கண்ணீருக்கு நாட்டு மக்கள் மதிப்பளித்தனர். ஆனால், அதே கண்ணீர் திரைக்கு பின்னால், தந்திரக் கதை ஒன்று அரங்கேறியது.

அதாவது, வேண்டுமென்றே கட்டத் தவறிய ‘கிங் பிஷர்’ மதுபான ஆலை அதிபரான விஜய் மல்லையாவின் வாராக்கடன் ரூ. 1201 கோடி உட்பட, 63 பெருமுதலாளிகளின் வாராக்கடன் ரூ. 7016 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா [SBI]. 30-6-16 காலகட்டம் வரை அந்த வங்கி மட்டும் ரூ 48000 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது!

மேலும், கே.எஸ். ஆயில் நிறுவனத்தின் 596 கோடி ரூபாய், சூர்யா பார்மஸி நிறுவனத்தின் 526 கோடி ரூபாய், கெட் பவர் நிறுவனத்தின் 400 கோடி ரூபாய், சாய் இன்ஃபோ சிஸ்டம் செலுத்த வேண்டிய 376 கோடி ரூபாயும் இதில் அடங்கும். இந்த தகவலை டி.என்.ஏ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இப்போது அவரது கண்ணீரு பெருவெள்ளத்திற்கு காரணம் புரிந்திருக்கும். ஆனால், ஏழைகளின் கண்ணீர்????

கல்விக்கடன் கட்ட தவறிய லெனின் என்ற பொறியியல் மாணவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஞாபகம் இருக்கிறதா?

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் ஜாஸ்மின் என்ற 9ஆம் வகுப்பு மாணவி, கல்வி கட்டனம் செலுத்தாத தனது தந்தையை, பள்ளி நிர்வாகம் அவமானப்படுத்தியதற்காக அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியுமா?

சென்னை கொருக்குப்பேட்டை ஆர்.கே. நகர் பகுதியில் கீதா என்ற கல்லூரி பெண், கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் தூக்கு போட்டு இறந்தது தெரியுமா?

மஹாராஷ்டிரா மாநிலம், மார்வாடி என்ற கிராமத்தில் 22 வயதே நிரம்பிய கோபால் ரத்தோடு என்ற விவசாயி, விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடனை திருப்பி செலுத்த முடியாது விஷம் அருந்தி இறந்தது தெரியுமா?

அவன் எழுதிவைத்த கடிதத்தில், “தொழில் அதிபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க தயாராக இருக்கின்றன. ஆனால், சொத்து இல்லாத ஒருவர், வங்கி கடன் தேவைப்பட்டால் என்ன செய்வது? பணக்கார வீட்டு பையன்கள் கிரிக்கெட்டும், கைப்பந்தும் விளையாடுகிறார்கள். ஆனால், எல்லாருக்கும் உணவு அளிக்கும் விவசாயிகளின் பையனால், அவற்றை விளையாட முடியுமா?” என்று கேட்டு இருந்தான். ஆட்சியாளர்கள் பதிலளிக்க முடியுமா?

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவசாயி சிம்ஹாரி வெங்கடேஸ்வர் ராவ், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டது நியாபகம் இருக்கிறதா?

தஞ்சாவூர் மாவட்டம் சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் என்பவர், நிதிநிறுவனம் மூலம் வாங்கிய டிராக்டருக்கு தவணை கட்டாத விவசாயியை காவல் துறையினர் தாக்கிய சம்பவம் நினைவிருக்கிறதா?

இவையெல்லாம் சமீபகாலத்தில் ஏற்பட்ட இந்த தேசத்தின் அவல நிலைகள். காலம் காலமாக கோடான கோடி ஏழை மக்கள், உழைக்கும் மக்கள் ஆட்சியாளர்களால் சாகடிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கருப்புப் பணத்தை ஒழிப்பதாக மோடி மேடைதோறும் முழங்கிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில், பாஜக எம்பி கோபால் ஷெட்டி, தற்கொலை செய்துக்கொள்ளும் விவசாயிகள் அனைவரும் வறுமை காரணமாக உயிரிழப்பதில்லை என்றும் தற்கொலை செய்துக்கொள்வது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டது என்று கூறியது எவ்வளவு மடத்தனமானது பார்த்தீர்களா?

ஆனால், அதே சமயம் நேற்று [16-11-16] புதன்கிழமை அன்று பிரபல சுரங்க தொழில் அதிபரும், பாஜக முன்னாள் அமைச்சருமான காளி ஜனார்த்தன ரெட்டி, தனது ஒரே மகளின் திருமணத்தை ரூ.500 கோடி செலவில் நடத்தியுள்ளார்.

5 ஹெலிபேடுகள், 1,500 நட்சத்திர ஹோட்டல்கள், திருமணம் நடைபெறும் இடம் அரண்மனை போன்று 38 ஏக்கர் நிலத்தில் செட்டுகள், திருமணத்திற்காக இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து அரிய வகை மலர்கள் என கொட்டிக் குவித்தது யாருடைய பணம்.

நம் பொருளாதார அமைப்பிற்கு வெளியே மிக அதிகளவில் பணம் புழங்கிக் கொண்டிருக்கிறது. இது எந்த கணக்கெடுப்பிலும் வராது. எந்த கண்காணிப்பிலும் வராது. அதற்கு வரி விதிப்பு முதலிய கட்டுப்பாடுகள் கிடையாது.

ஹவாலா முறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறிக் கொண்டிருக்கிறது. இவை நம் பொருளாதார அமைப்பிற்குள் வராமலேயே போய்விடுகின்றன.

இந்த நடவடிக்கையால் எந்த பணக்காரர்கள், எந்த வங்கிகளில் வரிசையில் நின்றார்கள் திருவாளர் பிரதமர் மோடி அவர்களே! எந்த பணக்காரர்களின் கருப்புப் பணத்தை கண்டறிந்துள்ளீர்கள். எந்த பெரும் பணக்காரர்கள் கடன் தொல்லையால் அவமானப்பட்டு இருக்கிறார்கள், தற்கொலை செய்துகொண்டிருக்கிறீர்கள்?

யாரிடம் இருப்பது கருப்புப் பணம் என்பது ஏழைகளிடம் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள் பிரதமர் மோடி அவர்களே! ஏழைகளின் கண்ணீர் உங்கள் கண்ணுக்குத் தெரிகிறதா பிரதமர் மோடி அவர்களே!