வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : புதன், 22 ஏப்ரல் 2015 (09:09 IST)

ஐ.பி.எல். 18 ஆவது லீக் : சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அணி பரபரப்பு வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.


 

 
ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 18 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. 
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லி முந்தைய லீக் ஆட்டத்தில் பீல்டிங் செய்கையில் ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக நேற்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஷான் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டார். கேப்டன் பொறுப்பை ஷேவாக் ஏற்று அணியை வழிநடத்தினார். 
 
‘டாஸ்’ வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பொறுப்பு கேப்டன் ஷேவாக், பீல்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, ஷேன் வாட்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதலில் இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர். 2 ஆவது ஓவரில் ஷேன் வாட்சன் அணியின் முதல் பவுண்டரியை அடித்தார். 
 
தொடர்ந்து ஆடிய ஷேன் வாட்சன் 35 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், அவர் கேச் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 95 ரன்னாக இருந்தது. அடுத்து களம் இறங்கிய தீபக் ஹூடா வந்த வேகத்தில், 9 பந்தில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 19 ரன்கள் எடுத்தார். ஷிவம் ஷர்மா பந்து வீச்சில் போல்டு ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 136 ரன்னாக இருந்தது.
 
இதையடுத்து களம் கண்ட ஸ்டீவன் சுமித், தான் சந்தித்த முதல் பந்தை சிக்சருக்கு தூக்க முயல, அதனை எல்லைகோடு அருகே நின்ற மேக்ஸ்வெல் பிரமாதமாக கேட்ச் செய்தார்.  நிலைத்து நின்று ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்த ரஹானே 18 ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார். மிட்செல் ஜான்சன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் கேட்ச் ஆகி ரஹானே தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
 
ரஹானே 54 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 74 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்த ஐ.பி.எல். தொடரில் இதுவரை 305 ரன்கள் சேர்த்துள்ள ரஹானே அதிக ரன்கள் எடுத்தவருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை தொடர்ந்து தக்கவைத்தார். 
 
இதைத்தொடர்ந்து களம் கண்ட ஜேம்ஸ் பவுல்க்னெர் 1 ரன்னில் அவுட் ஆனார். அதிரடி காட்டிய கருண்நாயர் 13 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. ஸ்டூவர்ட் பின்னி (12 ரன்கள்), சஞ்சு சாம்சன் (5 ரன்கள்) ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி ஆடியது.
 
பஞ்சாப் அணியின் பொறுப்பு கேப்டன் ஷேவாக் (1 ரன்) வந்த வேகத்தில் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் எம்.விஜய் 21 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
 
4 ஆவது விக்கெட்டுக்கு டேவிட் மில்லர், ஷான் மார்ஷ்சுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியா விளையாடியது. ஷான் மார்ஷ் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 65 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அடுத்து களம் கண்ட விருத்திமான் சஹா 19 ரன்னில் வெளியேற, நிலைத்து நின்ற டேவிட் மில்லர் 30 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 
 
இதைத் தொடர்ந்து, கடைசி கட்டத்தில் அக்ஷர் பட்டேலும், மிட்செல் ஜான்சனும் வெற்றிக்காக போராடினார்கள். கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான அந்த ஓவரில் இருவரும் 13 ரன்கள் சேர்த்தனர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டம் டையில் முடிந்தது. இந்த போட்டி தொடரில் டையில் முடிந்த முதல் ஆட்டம் இதுவாகும்.
 
ஆட்டம் டையில் முடிந்ததால், வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் (ஒரு ஓவர், 2 விக்கெட்) முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் பஞ்சாப் அணி தரப்பில் டேவிட் மில்லர், ஷான் மார்ஷ் ஆகியோர் பேட்டிங் செய்தனர். ராஜஸ்தான் வீரர் கிறிஸ் மொரிஸ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து மேக்ஸ்வெல் களம் கண்டார். ஷான் மார்ஷ் தொடர்ந்து 3 பவுண்டரி விளாச அந்த ஓவரில் 15 ரன்கள் வந்தது. 
 
தொடர்ந்து ஒரு ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் ராஜஸ்தான் அணியின் ஷேன் வாட்சன், பவுல்க்னெர் ஆகியோர் பேட்டிங் செய்தனர். பஞ்சாப் அணி வீரர் ஜான்சன் பந்து வீசினார். முதல் பந்தில் ஷேன் வாட்சன் போல்டு ஆனார்.
 
அடுத்து ஸ்டீவன் சுமித் களம் இறங்கினார். நோ-பாலாக வீசிய 2 ஆவது பந்தை ஸ்டீவன் சுமித் பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் ஒரு ரன் வந்தது. 3 ஆவது பந்தில் பவுல்க்னெரை, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ரன்-அவுட் செய்தார். இதனால் ராஜஸ்தான் 6 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் பஞ்சாப் அணி 9 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
 
தொடர்ந்து 5 வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் வெற்றி பயணத்துக்கு பஞ்சாப் அணி முற்றுப்புள்ளி வைத்தது என்பது குறிப்பிட்த்தக்கது.