ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (09:24 IST)

இதுதான் சினிமா..! ஆஸ்கர் விருதில் புதிய சாதனையை படைத்த ஸ்கார்சஸி!

Martin Scorcese
96வது ஆஸ்கர் விருது விழாவிற்கான சிறந்த இயக்குனருக்கான பரிந்துரையில் இடம்பெற்றுள்ளதன் மூலம் பிரபல இயக்குனர் மார்டின் ஸ்கார்சஸி புதிய சாதனையை படைத்துள்ளார்.



ஹாலிவுட்டில் 81 வயதாகியும் இன்னும் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருபவர் மார்டின் ஸ்கார்ச்ஸி. தி வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட், ஷட்டர் ஐலேண்ட், ஐரிஷ்மேன், டேக்ஸி ட்ரைவர், டிபார்ட்டட் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள மார்டின் ஸ்கார்சஸி பல திரைப்பட ஆர்வலர்களுக்கு குருநாதர் போல விளங்கி வருகிறார்.

அவரது இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியான படம்தான் ‘தி கில்லர்ஸ் ஆப் தில் ஃப்ளவர் மூன்’. செவ்விந்திய ரிசர்வேசன் நிலத்தில் வெள்ளையர்கள் பணத்திற்காக நடத்திய உண்மை கொலை சம்பவங்களை மையப்படுத்தி வெளியான இந்த படம் உலகம் முழுவதும் பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் ஸ்கார்சஸியின் ஆதர்ச நடிகர்களான லியானார்டோ டி காப்ரியோ, ராபர்ட் டி நீரோ நடித்திருந்தனர். செவ்விந்திய வம்சாவளியான லிலி க்ளாட்ஸ்டோன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


தற்போது 96வது ஆஸ்கர் விருது பரிந்துரையில் தி கில்லர்ஸ் ஆப் தி ஃப்ளவர் மூன் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்காக சிறந்த இயக்குனர் பிரிவில் 10வது முறையாக ஸ்கார்சஸி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் ஆஸ்கர் விருதில் சிறந்த இயக்குனருக்காக அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் என்ற புதிய பெருமையை அடைந்துள்ளார் ஸ்கார்சஸி. 10 முறை பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்சஸி அவரது தி டிபார்டட் படத்திற்காக மட்டுமே சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கரை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K